'இதை எதிர்பார்க்கவில்லையே!'

'கடைசியில் இவரும் வாஸ்துக்கு அடிமையாகி விட்டார் போலிருக்கிறதே...' என, காங்., கட்சியை சேர்ந்தவரும், கர்நாடக முதல்வருமான சிவகுமாரை கிண்டல் அடிக்கின்றனர், பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சியினர்.

நீண்ட இழுபறிக்கு பின், கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவிடம் இருந்து முதல்வர் பதவியை சமீபத்தில் கைப்பற்றிய சிவகுமார், தற்போது அதை தக்க வைப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். இதற்காக ஜோதிடம், வாஸ்து போன்ற விஷயங்களில் தீவிரமாக இறங்கி விட்டார்.

பெங்களூரில் உள்ள அனுகிரஹா இல்லம் தான், கர்நாடக முதல்வரின் அரசு பங்களாவாக உள்ளது. இந்த இல்லத்தில் குடியேறுவோர், தொடர்ந்து அரசியல் ரீதியாக பின்னடைவை சந்தித்து வருவதால், சிவகுமார் அங்கு செல்வதை தவிர்த்து விட்டார்.

அந்த இல்லத்துக்கு சற்று தொலைவில் உள்ள, பழமை வாய்ந்த குமார கிருபா விருந்தினர் பங்களாவுக்கு குடிபெயர திட்டமிட்டுள்ளார். வாஸ்து நிபுணர்களின் ஆலோசனைப்படி, அந்த பங்களாவில் சி ல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

'இது, மிகவும் பழமை வாய்ந்த பங்களா. மஹாத்மா காந்தி போன்ற பெரும் தலைவர்கள் தங்கியிருந்த இடம். வாஸ்து பிரச்னைக்காக, அந்த இல்லத்தில் சீரமைப்பு பணிகளை செய்வது கடும் கண்டனத்துக்குரியது...' என, பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் போர்க்கொடி துாக்கியுள்ளனர்.

இதனால், 'இப்படி எதிர்ப்பு வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லையே...' என, சிவகுமார் புலம்புகிறார்.

Advertisement