கிரைம் கார்னர்

மளிகை கடை மூதாட்டியிடம் செயின் பறிப்பு

தாம்பரம்: தாம்பரம் அடுத்த பெருங்களத்துார், விஜயலட்சுமி தெருவில் தனபாய், 73, என்பவர், மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கடைக்கு வந்த இருவர், பொருள் வாங்குவதுபோல் நடித்து, மூதாட்டி அணிந்திருந்த 7 சவரன் செயினை பறித்தனர்.

மூதாட்டி கூச்சலிடவே, அங்கிருந்தோர் மர்ம நபர்களை துரத்தினர். பைக் வேகத்தடையில் ஏறியபோது, தடுமாறி விழுந்தனர். இதில், மகேந்திரன், 22, என்பவர் பிடிபட்டார். மற்றொருவர் தப்பினார். பீர்க்கன்காரணை போலீசார் மகேந்திரனை கைது செய்தனர்.



சிறுமியை கடத்திய வாலிபர் கைது

ஆவடி: ஆவடி காவல் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியிடம், திருநின்றவூர் பகுதியில் வசிக்கும் அபினேஷ், 18, பழகியுள்ளார். கடந்த ஏப்., மாதம், ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்றார். மறுநாள் சிறுமி வீட்டுக்கு வந்த நிலையில், அபினேஷ் தலைமறைவானார். ஆவடி மகளிர் போலீசார், தலைமறைவாக இருந்த அபினேஷை 'போக்சோ' வழக்கில், நேற்று கைது செய்தனர்.



கிணற்றில் மிதந்த பெண் உடல்

படப்பை: படப்பை அடுத்த சாலமங்கலத்தைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி என்ற பியூலா, 30; மனநலம் குன்றியவர். சில நாட்களுக்கு முன் மாயமான அவர், அப்பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் சடலமாக நேற்று மீட்கப்பட்டார். படப்பை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement