ஆட்டோ தொழிலாளர் சங்க ஆலோசனைக் கூட்டம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில், மாவட்ட இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்ட தலைவர் அருண் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் அன்பழகன், செல்வம் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் சக்திவேல், செயலாளர் பாலகிருஷ்ணன் வாழ்த்திப் பேசினர். மாவட்ட செயலாளர் மதன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர் சங்கத்தின் மாநில தலைவர் மனோகர் பேசுகையில், ‘ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மத்திய அரசின் திட்டப் பயன்கள் முழுதுமாக கிடைத்திட அனைவரும் நம் இயக்கத்தில் உறுப்பினராக சேர்க்கை பெற வேண்டும். தமிழக அரசின் நல வாரிய உறுப்பினர்களாக சேர்க்கை பெறுவதன் மூலம் உங்களுக்கு அரசின் நலத்திட்ட பயன்கள் பெற்று தரப்படும். அனைவரும் ஒற்றுமையாகவும், பாதுகாப்புடனும், குடும்ப உறுப்பினர்களின் மேம்பாட்டுக்காகவும் செயல்பட வேண்டும்’ என்றார்.
தொடர்ந்து கச்சிராயபாளையம் கரூர் வைஸ்யா வங்கி கிளை மேலாளர் சிவராமன், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஜீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்கு துவங்கிடவும், மாதம் தோறும் 20 ரூபாய் மட்டும் செலுத்தி 2 லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீடு பெறுவதற்கான வழிமுறை குறித்து விளக்கினார்.
தொடர்ந்து அனைவருக்கும் உறுப்பினர் சேர்க்கை படிவமும், நல வாரியத்தில் இணைவதற்கான விண்ணப்பமும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள் சேட்டு, செந்தாமரை, பொதுக்குழு உறுப்பினர்கள் கண்ணன், சாமிதுரை, முத்தையன், செயற்குழு உறுப்பினர்கள் ஆனந்த், துரை உட்பட பலர் பங்கேற்றனர்.
சங்க உறுப்பினர் அசோக்குமார் நன்றி கூறினார்.