இந்தியா - ஆஸி., கூட்டுச்செயல்பாடு டெஸ்ட் போட்டி; முடிவுகள் டி20; கிரிக்கெட் மொழியில் விளாசிய மோடி!

11


மெல்போர்ன்: இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான உறவு மற்றும் செயல்பாட்டை கிரிக்கெட் போட்டியுடன் ஒப்பிட்டு பிரதமர் மோடி பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் இரு நாட்டு தொழில் துறையினர், அரசு அதிகாரிகள் பங்கேற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இந்தியாவின் வலுவான பொருளாதார வளர்ச்சி, கொள்கை சீர்திருத்தங்கள், டிஜிட்டல் மாற்றம் மற்றும் விரிவடைந்து வரும் புதிய கண்டுபிடிப்பு சுற்றுச்சூழல் அமைப்பு ஆகியவை ஆஸ்திரேலிய நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. உற்பத்தி, எரிசக்தி, உள்கட்டமைப்பு, நகர்ப்புற மேம்பாடு, விமான போக்குவரத்து, செயற்கை நுண்ணறிவு, உணவு பதப்படுத்துதல் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் ஆகிய முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவில் உள்ள நீண்ட கால முதலீட்டு வாய்ப்புகளை ஆஸ்திரேலிய முதலீட்டாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நமது இரு நாடுகளின் பலமே, மக்கள் இடையிலான உறவுகள் தான். இந்திய வம்சாவளியினர் ஆஸ்திரேலியாவின் சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றுகின்றனர். இந்திய மாணவர்கள் கல்வி கற்க விரும்பும் நாடாக ஆஸ்திரேலியா உள்ளது. ஆஸ்திரேலிய பல்கலைகளின் வளாகங்கள் இந்தியாவில் தொடங்கப்படுவது நமது கூட்டுச் செயல்பாட்டில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளது

இந்தியாவில் ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உயர்கல்வி, ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் ஆழமான ஒத்துழைப்பு, எதிர்கால உலகளாவிய வாய்ப்புகளுக்கு இரு நாடுகளின் திறமையாளர்களை ஊக்குவிக்கும்.

கிரிக்கெட் தான் இந்தியா -ஆஸ்திரேலியா ராஜதந்திர உறவின் மொழியாக இருக்கிறது. நம் உறவின் நோக்கங்கள், ஒரு நாள் போட்டியை போன்றவை. முடிவுகள் அனைத்தும் டி20 போட்டிகளை போல வேகமானவை. நமது கூட்டுச் செயல்பாடு, டெஸ்ட் போட்டிகளை போல ஆழமானது, நீளமானது.

வரும் ஆண்டுகளில், ஒலிம்பிக் மற்றும் காமன்வெல்த் போட்டிகள் போன்ற முக்கிய விளையாட்டு போட்டிகள் இரு நாடுகளிலும் நடைபெற உள்ளன. இதன் மூலம், நமது விளையாட்டு ஒத்துழைப்பு அதிகரிக்கும். மேலும் விளையாட்டு உள்கட்டமைப்பில் முதலீடு செய்வதற்கான பல வாய்ப்புகளும் உருவாகும், என்று கூறினார்.


ஒன்றும் ஒன்றும் பதினொன்று!

இந்திய - ஆஸி., கூட்டுக்கூட்டத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் ஆன்டனி அல்பானிஸ், இரு நாடுகளின் ஒத்துழைப்பை குறிப்பிட்டு, ''ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் இரண்டாக மாறி பலமாகி விடும்,'' என்றார். அதற்கு பிரதமர் மோடி, ''ஒன்றும், ஒன்றும் அருகருகே நின்றால், பதினொன்று ஆகி விடும்,'' என்று கூறியதால் கூட்டத்தில் சிரிப்பலை ஏற்பட்டது.

Advertisement