மாணவியருக்கான வாலிபால் போட்டி லேடி சிவசாமி பள்ளி அணி வெற்றி
சென்னை: பள்ளி மாணவியர் அணிகளுக்கான வாலிபால் போட்டியில், முதல் போட்டியில் லேடி சிவசாமி பள்ளி அணி அபார வெற்றி பெற்றது.
லேடி சிவசாமி அய்யர் மகளிர் பள்ளி சார்பில், 30வது மகாராஜா ஸ்ரீ விஜியராமா கணபதி கோப்பைக்கான பள்ளிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டி, மயிலாப்பூரில் நேற்று துவங்கியது. இப்போட்டியில், சென்னை உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 19 பள்ளிகளைச் சேர்ந்த மாணவியர் அணிகள் பங்கேற்றுள்ளன.
நேற்று காலை தொடங்கிய முதல் நாள் போட்டியை, இந்திய வாலிபால் வீரரும், இந்தியன் வங்கி உதவி மேலாளருமான மனோஜ் தொடங்கி வைத்தார்.
முதல் நாள் போட்டியில், நடப்பு சாம்பியனான லேடி சிவசாமி பள்ளி, நீலாங்கரை பம்ஸ் பள்ளி அணியை 25- – 21, 25 – -18 என்ற நேர் செட்டில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
மற்றொரு ஆட்டத்தில், சென்னை பிரசிடென்சி பள்ளி, 25 – -14, 25- – 20 என்ற புள்ளிக்கணக்கில் தி.நகர் ராமகிருஷ்ணன் பள்ளியையும், தி.நகர் குண்டூர் சுப்பையா பள்ளி, 25- – 16, 25 – -21 என்ற புள்ளிக்கணக்கில், மயிலாப்பூர் ரோசரி மெட்ரிக் பள்ளியையும் வீழ்த்தின. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.