‘யங் ரைசிங் ஸ்டார்ஸ்’ அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

சென்னை: அகாடமி சார்பில் நடக்கும் கிரிக்கெட் போட்டியில் ‘யங் ரைசிங் ஸ்டார்ஸ்’ அணி, ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.

தி ப்ளூ ஸ்கை கிரிக்கெட் அகாடமி சார்பில், ‘லீக் கம் நாக் அவுட்’ கிரிக்கெட் போட்டிகள், சென்னையில் பல்வேறு மைதானங்களில் நடக்கின்றன. இதில், முகப்பேரில் நடந்த லீக் ஆட்டத்தில், ஓ.ஜி., பாயிஸ் மற்றும் யங் ரைசிங் ஸ்டார்ஸ் அணிகள் எதிர்கொண்டன.

முதலில் பேட் செய்த ஓ.ஜி., பாயிஸ் அணி, 19.5 ஓவர்களில் 165 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலக்கை துரத்திய யங் ரைசிங் ஸ்டார்ஸ் அணிக்கு, சுவ்ரத் பப்னா அதிரடியாக விளையாடி, 55 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 90 ரன்கள் குவித்தார்.

இதில், ஒன்பது பவுண்டரி, ஆறு இமாலய சிக்சர்கள் அடங்கும். இதனால், 18.2 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு, 168 ரன்கள் எடுத்து, ஏழு விக்கெட் வித்தியாசத்தில் யங் ரைசிங் ஸ்டார் அணி வெற்றி பெற்றது.

பேட்டிங்கில் மிரட்டியதுடன், பந்துவீச்சிலும் இரு ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து, ஒரு விக்கெட்டை எடுத்த சுவ்ரத் பப்னா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

Advertisement