மெரினாவில் மாணவரை வழிமறித்து வெட்டு: மீண்டும் தலைதுாக்கிய 'ரூட் தல' பிரச்னை

மெரினா:'பஸ் ரூட் தல' தகராறில் மாநில கல்லுாரி மாணவரை வெட்டிய, அதே கல்லுாரியைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சமீபத்தில் கல்லுாரி திறக்கப்பட்ட முதல் நாளிலேயே, பேருந்தில் மாணவர்கள் சிலர் ரூட்டு தல விவகாரத்தில், ரகளையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பயணியர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில், மாநிலக்கல்லுாரியில், 2ம் ஆண்டு படித்து வரும் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த குமார், 19, என்ற மாணவரை, மெரினா அணுகு சாலையில் 'நம்ம சென்னை - செல்பி பாயின்ட்' பின்புறம் ஒரு கும்பல் வழிமறித்து வெட்டி தப்பியது.

தலையில் ரத்த காயமடைந்த அந்த மாணவரே, ஆட்டோவில் ஏறி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில், மெரினா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அவரிடம் விசாரித்தனர். அப்போது, சக கல்லுாரி மாணவர்கள் ஐந்து பேர் வெட்டியது தெரிய வந்தது.

விசாரணையின்போது, மேல்நடவடிக்கை ஏதும் தேவையில்லை என, மாணவர் குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இருப்பினும் போலீசார் சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து, அவரை வெட்டியவர்களை தேடி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், 'பேருந்து ரூட் தல' பிரச்னையில் குமார் வெட்டப்பட்டது தெரிய வந்தது. சில தினங்களுக்கு முன், ரூட் தல பிரச்னை தொடர்பாக, மெரினா அணுகு சாலையில் பட்டா கத்தியுடன் சுற்றிய மாநிலக்கல்லுாரி மாணவர்கள் இருவரில், ஒருவரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement