மணல் நிறுவனத்திடம் கார் வாங்கினேனா? மறுக்கிறார் ராதாபுரம் த.வெ.க., -- எம்.எல்.ஏ.,

3

ராதாபுரம்: திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தொகுதி த.வெ.க., -- எம்.எல்.ஏ., டாக்டர் கிறிஸ்டோபர், 'மணல் நிறுவனத்திடமிருந்து தான் லஞ்சமாக கார் பெற்றதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது' என, விளக்கம் அளித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு:

இரண்டு நாட்களாக என் மீது சமூக வலைதளங்களில் அவதுாறு பரப்பப்பட்டு வருகிறது.

ராதாபுரம் தொகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், மாற்று கட்சியினர் திட்டமிட்டு இதுபோன்ற பொய்யான தகவல்களை பரப்புகின்றனர்.

சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படத்தில் உள்ள காரின் பதிவு எண்ணை, இணையதளத்தில் சரிபார்த்தாலே உண்மை தெரியும். அந்த கார், 2019-ல் என் தந்தை பெயரில் பதிவு செய்யப்பட்டது.

என் பெயரை பயன்படுத்தி யாரேனும் பணம் கேட்டாலோ, காரியங்கள் செய்து தருவதாக கூறினாலோ பொதுமக்கள் நம்ப வேண்டாம். என்னை சந்திக்க விரும்புபவர்கள் ராதாபுரம் அலுவலகத்தில் முன்பதிவு செய்து நேரில் சந்திக்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ராதாபுரம் தொகுதியில், கடல் மணலில் இருந்து தாது மணல் பிரித்தெடுக்கும் பணியில் வி.வி.மினரல்ஸ் மற்றும் அவர்கள் சகோதர நிறுவனம் பி.எம்.சி., ஆகியவை ஈடுபடுகின்றன. இதில், பி.எம்.சி., நிறுவனம் இவருக்கு கார் வழங்கியதாக அவதுாறு பரப்பப்பட்டது.

ஆனால், அந்த நிறுவனமும், அவதுாறு பரப்பியவர்கள் மீது வழக்கு தொடரப்படும் என, மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

Advertisement