நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றுவது நிற்காது அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா திட்டவட்டம்

பெங்களூரு: ''பெங்களூரு நகரில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி எக்காரணத்தை கொண்டும் நிற்காது,'' என, பெங்களூரு நகர் புற மேம்பாட்டு துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா தெளிவுபடுத்தி உள்ளார்.

பெங்களூரு நகரில் நடைபாதைகளை ஆக்கிரமித்து, பலரும் கடைகள் அமைப்பதால், பாதசாரிகள் சாலையில் நடந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் சில விபத்துகளும் நடக்கின்றன.

இதையடுத்து, 'நடைபாதை வியாபாரிகள், தங்கள் கடைகளை ஜூலை 1ம் தேதிக்குள் தாங்களாகவே முன்வந்து கடையை அகற்றிவிட வேண்டும்' என, பெங்களூரு நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா எச்சரிக்கை விடுத்தார்.

அதன்படி, ஜூலை 1ம் தேதி முதல் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, பாதசாரிகள் நடந்து செல்லும் வகையில் நடை பாதைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. அரசின் இந்த முடிவை எதிர்த்து, நடைபாதை வியாபாரிகள், நேற்று முன்தினம் போராட்டமும் நடத்தினர்.

இதையடுத்து, ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையத்துக்கு உட்பட்ட தெருவோர வியாபாரிகள் அமைப்புகளின் பிரதி நிதிகளுடன், அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

பின், அவர் அளித்த பேட்டி:

பெங்களூரில் நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டதால், பாதசாரிகள் சாலையில் நடந்து செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின்றனர். இதுவரை, 900 பேர் உயிரிழந்துள்ளனர்; 3,000க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர்.

பாதுகாப்பான நடைபாதை இல்லாததால், தினமும் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, மாநில அரசு முன்னெடுத்து உள்ளது.

பெரிய வணிக வளாகங்கள், கடைகளுக்கு முன் உள்ள நடைபாதைகளையும், சாலைகளையும் சட்ட விரோதமாக ஆக்கிரமித்திருந்த அனைத்து நிரந்தர கட்டமைப்புகளும் அகற்றப்பட்டு உள்ளன.

நகரில் 18 ஆயிரம் சாலைகள் உள்ளன. தற்போது 1,500 பிரதான சாலைகளில் மட்டுமே நடைபாதைகள் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு வருகிறது. இது வெறும், 10 சதவீதம் தான்.

நடைபாதைகளில் இருந்த 2,200 விளம்பரங்களும், பெயர் பலகைகளும் அகற்றப்பட்டு உள்ளன. கடைகளுக்கு முன்னால் பொது மக்கள் நடப்பதற்கு இடையூறாக இருந்த 1,580 கான்கிரீட் தடுப்புகள், பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன.

கடைகளுக்கு முன் உள்ள நடைபாதைகளை மூட பொருத்தப்பட்டிருந்த, 1,700க்கும் மேற்பட்ட இரும்பு, பைபர் தகடுகள் அகற்றப்பட்டு உள்ளன. இதன் மூலம் கடை உரிமையாளர்கள் தங்கள் வணிக இடத்தை சட்ட விரோதமாக விரிவுபடுத்துவது தடுக்கப்பட்டு உள்ளது.

இந்த பிரதான சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பிரதான சாலை அருகிலுள்ள இணைப்பு சாலைகளில் தங்கள் வியாபாரத்தை அவர்கள் தொடரலாம். இதில் எந்த தடையும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


@block_B@ 8 நாட்களில் 430 கி.மீ., நடைபாதை மீட்பு


ஜூலை 1ம் தேதி முதல், 8ம் தேதி வரை பெங்களூரு நகரில் மொத்தம் 430 கி.மீ., நடைபாதையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உள்ளன. நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில், 44.3 கி.மீ., நடைபாதைகள் மீட்கப்பட்டு, அப்பகுதி சுத்தம் செய்யப்பட்டு உள்ளது. மாநகராட்சி மீட்கப்பட்டவை பெங்களூரு மேற்கு 115.02 கி.மீ., பெங்களூரு வடக்கு 104.15 கி.மீ., பெங்களூரு தெற்கு 80.06 கி.மீ., பெங்களூரு கிழக்கு 69.32 கி.மீ., பெங்களூரு சென்ட்ரல் 61.45 கி.மீ.,block_B

Advertisement