தேர்தலுக்கு முன் கோரிக்கை விடுத்த குடும்பத்திற்கு குடியிருப்பு ஒதுக்கீடு
தஞ்சாவூர்: தேர்தலுக்கு முன், கோரிக்கை விடுத்த ஏழை குடும்பத்துக்கு, புதிய குடியிருப்பை ஒதுக்கீடு செய்து, அதற்கான ஆணையை அமைச்சர் வழங்கினார்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே, உமையாள்புரத்தை சேர்ந்தவர் பவுசியா. இவரது கணவர் சசிக்குமார். தம்பதிக்கு, 4 குழந்தைகள் உள்ளனர். குடிசை வீட்டில் வாழ்வதால், தங்களுக்கு வீடு கட்டி தருமாறு, பவுசியா மற்றும் அவரது மகன், தேர்தலுக்கு முன், ஒரு வீடியோ வெளியிட்டு, த.வெ.க., தலைவர் விஜயிடம் கோரிக்கை விடுத்தனர்.
அதை பார்த்த தமிழக முதல்வர் விஜய், பவுசியாவின் கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கு தஞ்சாவூரில் குடியிருக்க வீடு வழங்குமாறு உத்தரவிட்டார். அதன்படி, தஞ்சாவூருக்கு நேற்று வந்த, வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் ராஜ்குமார், புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு நிர்வாக அலுவலகத்துக்கு, பவுசியாவின் குடும்பத்தை வரவழைத்தார்.
அதன்பின் அவர்களுக்கு, பிள்ளையார்பட்டியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடு ஒன்றை ஒதுக்கீடு செய்து, அதற்கான ஆணையை வழங்கினார்.