சைதை - தேனாம்பேட்டை மேம்பால பணிகள் இழுபறி! 60 சதவீதம் கூட முடியலை; ஓராண்டாகும் என்கிறது நெடுஞ்சாலை துறை
சென்னை: அண்ணா சாலையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், 621 கோடி ரூபாயில் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட, சைதாப்பேட்டை - தேனாம்பேட்டை இடையேயான இரும்பு மேம்பால பணிகள், இன்னும் 60 சதவீதம்கூட முடியாமல் இழுபறியாக உள்ளது.
கடந்த மாதம் ஜூனில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது, இன்னும் ஓராண்டாகும் என, மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
தாமதம் சென்னை நகரின் முக்கிய போக்குவரத்து வழித்தடமான அண்ணா சாலையில், நெரிசலை குறைக்கும் வகையில், 621 கோடி ரூபாயில், சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரை, 3.20 கி.மீ., துாரம் மேம்பாலம் அமைக்கும் பணி, 2024 ஜனவரியில் தொடங்கப்பட்டது.
இந்த பாலம் வழக்கமான கட்டுமானம் போல அல்லாமல், முற்றிலும் இரும்பு கட்டமைப்பு பாலமாக, நவீன முறையில் அமைக்கப்படுகிறது.
பாலத்துக்காக, 131 இடங்களில், 'டெக்'குகள் எனும் இரும்பு துாண்களுடன், பாதசாரிகள் செல்லும் தாங்கு தளம் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு, 'டெக் ஸ்லாப்'பும் 30 மீட்டர் நீளம் கொண்டது. ஏறுதளப் பாதைகள் மற்றும் விபத்துகளைத் தடுக்கும் பாதுகாப்பு தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மேம்பாலத்திற்கான பெரும்பாலான இரும்பு மற்றும் கான்கிரீட் கட்டமைப்புகள், மஹாராஷ்டிரா, கோவா, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் முன்கூட்டியே தயாரிக்கப்பட்டு, சென்னை கொண்டு வரப்பட்டு பொருத்தப்படுகின்றன. இதனால் பணிகள் விரைவாக முடியும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், குடிநீர், கழிவுநீர் மற்றும் மின்சார இணைப்புகளை மாற்றியமைக்கும் பணிகளில் ஏற்பட்ட தாமதம், தேர்தல் கால இடையூறு, தொழிலாளர்கள் பற்றாக்குறை ஆகியவை, பணிகளின் வேகத்தை பாதித்துள்ளன.
கடந்த ஜூன் மாதமே பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இன்னும் பணிகள் நிறைவடையாததால், அண்ணா சாலையில் நெரிசல் மேலும் அதிகரித்துவிட்டது.
சிறப்பு பாலம் இதுகுறித்து, வாகன ஓட்டிகள் சிலர் கூறிய தாவது:
சென்னையில் ஜி.எஸ்.டி., சாலை மற்றும் அண்ணா சாலையில், ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அண்ணாசாலையில் நெரிசலை குறைக்கவே, சைதாப்பேட்டையில் இருந்து தேனாம்பேட்டை வரை புதிய மேம்பால பணிகள், 2024 ஆரம்பத்தில் தொடங்கின.
சில மாதங்கள் வேகமாக பணிகள் நடந்தன. அதன்பின், ஆமை வேகத்தில் பணிகள் நடக்கின்றன. சில நேரங்களில் பணிகள் நடப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை.
இதனால், இந்த பகுதிகளில் கடுமையான போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு, நீண்ட துாரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
பணிகள் முடிக்கப்பட்ட பகுதிகளில் சாலைகளும் சீரமைக்காமல் உள்ளன. இரண்டரை ஆண்டுகளை கடந்தும் இழுபறியாக உள்ள மேம்பால பணிகளை விரைந்து முடிக்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
சைதாப்பேட்டை - தேனாம்பேட்டை இடையேயான மேம்பாலம் வழக்கமான கான்கிரீட் பாலம் அல்ல; முழுமையாக இரும்பு கட்டமைப்பில் உருவாகும் சிறப்பு பாலம்.
திட்டம் எனவே, ஒவ்வொரு கட்டப் பணியிலும் கூடுதல் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. தற்போது 60 முதல் 70 சதவீத பணிகள் முடிந்துள்ளன.
பயன்பாட்டு வசதிகள் மாற்றம், தேர்தல் கால தாமதம், தொழிலாளர்கள் பற்றாக்குறை ஆகிய காரணங்களால் பணிகள் பாதிக்கப்பட்டன. இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை மற்றும் நிலையங்கள் உள்ளதால், பல்வேறு தொழில்நுட்ப ஆய்வுகளுக்குப் பிறகே, அடுத்த கட்டப் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
பாதுகாப்பு நடைமுறைகளை முழுமையாக பின்பற்றி, அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டு உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.