மத்திய அமைச்சர் சுற்று பயணம் பாதியில் ரத்து: புதுச்சேரியில் பரபரப்பு
புதுச்சேரி: மூன்று நாள் அரசு முறைப் பயணமாக வருகை தந்த மத்திய அமைச்சர் திடீரென தனதுசுற்றுப் பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு திருப்பதி புறப்பட்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துணை அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சி மூன்று நாள் அரசு முறைப் பயணமாக நேற்று முன்தினம் டில்லியில் இருந்து விமானம் மூலம் புதுச்சேரிக்கு வருகை தந்தார். அவர் அன்று இரவு, உப்பளம் விருந்தினர் மாளிகையில் தங்கினார்.
நேற்று காலை புதுச்சேரி தலைமை செயலகத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில்நிறுவன பிரதிநிதிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார். தொடர்ந்து, மதியம் உப்பளம் விருந்தினர் மாளிகையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்தார். பின்னர் மதிய உணவுக்குப் பின் தட்டாஞ்சாவடி சிறு, குறு, நடுத்தர தொழில் அலுவலகத்தில் ஆய்வு செய்துவிட்டு, அங்கிருந்து ஆரோவில் சென்று மாத்திரி மந்திர் பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்து சாலை வழியாக திருப்பதிக்கு புறப்பட்டு சென்றார்.
மூன்று நாள் பயணமாக புதுச்சேரிக்கு வருகை தந்த மத்திய அமைச்சர் நேற்று தனது ஆய்வு பணிகளை முடித்துவிட்டு இரவு உப்பளம் விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்துவிட்டு, இன்று வில்லியனுாரில் உள்ள பி.எம்.விஸ்வகர்மா கைவினை மையத்தில் ஆய்வு செய்துவிட்டு மதியம் புதுச்சேரியில் இருந்து பெங்களூரு சென்று, அங்கிருந்து டில்லி செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவர் நேற்று ஆரோவில் பயணத்தை முடித்துக் கொண்டு, அவசரமாக சாலை வழியாக திருப்பதிக்கு புறப்பட்டு சென்றது அரசு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.