தொழில் தொடங்க விரைவாக ஒப்புதல் அளிக்க முதல்வர் விஜய் அறிவுறுத்தல் 

சென்னை: தமிழகத்தில் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு அரசு துறைகளின் ஒப்புதல்களை விரைவாக பெற்று தர நடவடிக்கை எடுக்குமாறு தொழில் துறை அதிகாரிகளை, முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

முதல்வர் விஜய் தலைமையில், தொழில் துறை சார்பில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம், சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. இதில், துறை அமைச்சர் கீர்த்தனா, தலைமை செயலர் சாய்குமார், தொழில் துறை செயலர் விஜயகுமார், 'டிட்கோ, சிப்காட்' நிறுவனங்களின் உயரதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், தமிழகத்தில் புதிய முதலீடுகளை ஈர்க்க தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கும் வகையில் புதிய தொழில் கொள்கையை வெளியிடுவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும், 'சிப்காட்' நிறுவனத்தின் புதிய தொழில் பூங்காக்கள் அமைக்கும் பணிகளை முடுக்கி விடுமாறும், தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு அரசு துறைகளின் அனுமதிகளை விரைவாக பெற்று தர நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளிடம், முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement