சிறைகளில் உள்ள கைதிகளுக்கு மருத்துவ முகாம் நடத்த உத்தரவு

மதுரை: தமிழக சிறைகளில், கைதிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய, தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

திருநெல்வேலி மாவட்டம், ஓடைக்கரையை சேர்ந்த மேரி ரெஜினா ஸ்டெல்லா தாக்கல் செய்த மனு:
என் கணவர் ஜான், 60. ஒரு வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக, திருநெல்வேலி மத்திய சிறையில் உள்ளார். அவருக்கு உடல்நலம் பாதித்துள்ளது. சரியாக சிகிச்சை அளிக்கவில்லை. அவரை திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதித்து, சிகிச்சை அளிக்க சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும் . இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ஆர்.பூர்ணிமா அமர்வு பிறப்பித்த உத்தரவு:

மாநிலம் முழுதும் பல்வேறு சிறைகளில் சிகிச்சைக்காக காத்திருக்கும், 10,581 கைதிகளில், சென்னையில் மட்டும், 7,812 பேர் உள்ளனர். தங்களின் வழிக்காவல் பாதுகாப்பிற்கு போலீசார் இல்லாததால், மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் காத்திருக்கின்றனர்.

கைதிகளின் உடல்நலம் முக்கியமானது. பாதுகாப்பிற்கான போலீசாரை வழங்குவதில் நடைமுறை சிரமங்கள் மற்றும் இதற்காக அரசுக்கு ஏற்படும் பெரும் செலவினங்களை கண்டு நீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு இருக்க முடியாது.

இதற்கு தீர்வாக, கைதிகளை வெளியில் சிறப்பு மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்வதை தவிர்த்து, சிறை வளாகங்களிலேயே மருத்துவ நிபுணர்கள் மூலம் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தலாம். காலதாமதம் தவிர்க்கப்படும். அரசுக்கான செலவு குறையும்.

சிறைகளில் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சிறைத்துறை டி.ஜி.பி., பரிசீலிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, ஜூலை 20ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்டனர்.

Advertisement