அரசு மருத்துவமனையில் இயற்கை மருத்துவ பிரிவு கட்டடம் துவக்கம்
வடலூர்: வடலுார் அரசு மருத்துவமனையில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவு கட்டடத்தை அமைச்சர் துவக்கி வைத்தார்.
வடலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், நகரம் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் தினசரி சிகிச்சை பெறுவதற்காக வந்து செல்கின்றனர்.
இங்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவு கட்டடங்களை நேற்று வீட்டு வசதி துறை அமைச்சர் ராஜ்குமார் துவக்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது :
வடலுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில், தேசிய ஆயுஷ் குழும நீதியின் கீழ் ரூ.,15 லட்சம் ரூபாய் மதிப்பில் இருபாலர் ஆலோசனை அறைகள், கழிப்பறை மற்றும், காத்திருப்பு கூடம் ஆகிய வசதிகளுடன் மொத்தம் 45.43 ச.மீ., பரப்பளவில், யோகா மற்றும் இயற்கை மருத்துவ கட்டடம் கட்டப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஆயுஷ் மருத்துவ பிரிவின் மூலம், அரசு பள்ளிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, மாணவர்களுக்கு ரத்த சோகை, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும், கற்றல் குறைபாடுகளுக்கு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.
மேலும், வளரிளம் பெண்களுக்கான பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. கர்ப்பிணிகளுக்கு யோகா உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்பட்டு வரும் ஆயுஷ் மருத்துவ பிரிவிற்கு தினசரி, 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற வருகின்றனர்.
தற்போது இப்பிரிவிற்கு தனி மருத்துவ பிரிவு கட்டடம் அமைக்கப்பட்டுள்ளதால் கூடுதலாக பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்க ஏதுவாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாவட்ட சுகாதார அலுவலர் ராஜா, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் பூங்கோதை, வட்டார மருத்துவ அலுவலர் பாலசந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.