மண்டபத்தில் இருந்து கடத்தப்பட்ட ரூ.1 கோடி கடல் அட்டை பறிமுதல்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் இருந்து இலங்கைக்கு கடத்திச் சென்ற ரூ.1 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகளை அந்நாட்டு கடற்படையினர் பறிமுதல் செய்து அங்குள்ள மீனவர்கள் 23 பேரை கைது செய்தனர்.
உணவுப்பொருளுக்காக பயன்படுத்தப்படும் அரிய வகை கடல் வாழ் உயிரினமான கடல் அட்டையை பிடிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஆனால் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதியில் கடத்தல்காரர்கள் கடல் அட்டைகளை பிடித்து கள்ளத்தனமாக படகில் இலங்கைக்கு கடத்திச் செல்வது வாடிக்கையாக நடக்கிறது. இந்நிலையில் மன்னார் கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான 10 படகுகளை அந்நாட்டு கடற்படையினர் சோதனையிட்டனர்.
இதில் அவித்த நிலையில் பிளாஸ்டிக் பையில் 60 ஆயிரத்து 448 கடல் அட்டைகள் இருந்தது. இதன் மதிப்பு ரூ. 1 கோடி. இது தொடர்பாக மீனவர்கள்
23 பேரை கைது செய்தனர். இதனை மண்டபம் நடுக்கடலில் இருந்து படகில் கடத்தல்காரர்கள் கடத்திச் சென்று இலங்கை கடத்தல்காரர்களிடம் ஒப்படைத்துள்ளனர். இதில் ஈடுபட்ட மண்டபம் கடத்தல்காரர்கள் மற்றும் விசைப்படகு உரிமையாளர்கள் குறித்து மத்திய, மாநில உளவு போலீசார் விசாரிக்கின்றனர்.