ராமநாதபுரம் மாவட்டத்தில் குண்டு மிளகாய்க்கு   விலை கிடைக்கல:  அரசு நேரடி கொள்முதல் செய்ய  வலியுறுத்தல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டு தோறும் மிளகாய் சாகுபடி அதிகரித்து வருகிறது. விளைச்சல் கிடைத்தாலும் இடைத்தரகர்கள் தலையீட்டால் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில்லை. நெல் போல அரசே நேரடியாக மிளகாய் கொள்முதல் செய்ய முதல்வர் விஜய் உத்தரவிட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி, உத்திரகோசமங்கை, முதுகுளத்துார், திருவாடானை, கீழக்கரை, சிக்கல், ஆர்.எஸ்.மங்கலம், பரமக்குடி உள்ளிட்ட பகுதியில் ஆண்டு தோறும் 19 ஆயிரம் ஏக்கரில் 50 ஆயிரம் டன் மிளகாய் சாகுபடி நடக்கிறது. குண்டு மிளகாய் வெளி மாநிலம், மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

பணப்பயிர் என்பதாலும், நல்ல மகசூல் கிடைப்பதாலும் ஆண்டு தோறும் 300 முதல் 600 எக்டேர் வரை மிளகாய் சாகுபடி பரப்பு அதிகரித்து வருகிறது. ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்கின்றனர்.நேரடியாக மசாலா நிறுவனம், மொத்த வியாபாரிகளிடம் விற்க முடியாமல் இடைத்தரகர்களிடம் குறைந்த விலைக்கு விற்று, அதிக கமிஷன் தர வேண்டியுள்ளது. இதனால் எதிர்பார்த்த லாபமின்றி ரூ.பல ஆயிரம் இழப்பு ஏற்படுகிறது.

ராமநாதபுரம் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. மிளகாய் மண்டலம் அமைக்க அரசு உத்தரவிட்டது. ஆண்டு தோறும் பருவம் தவறிய மழையால் மிளகாய் விளைச்சல் பாதிக்கப்படுவது வாடிக்கையாகிள்ளது. மிளகாய் வத்தல் கிலோ ரூ.200க்கும் மேல் விற்றால் தான் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். தரகர்களின் சிண்டிகேட் காரணமாக அதிக கமிஷனை வழங்க வேண்டியுள்ளது.

கமிஷனனை குறைக்க வேண்டும். குறிப்பாக நெல் போல மிளகாய்க்கு அரசு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்து, நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

---

Advertisement