'மேகதாது அணை கட்டாமல் தடுக்க அரசு நடவடிக்கை'
''மேகதாதுவில் அணை கட்டாமல் தடுப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது,'' என, வேளாண்துறை அமைச்சர் வினோத் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் வேளாண்துறை அமைச்சர் வினோத், 13.91 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டடங்களை நேற்று திறந்து வைத்தார்.
ஆர்சுத்திப்பட்டு திறந்தவெளி கிடங்கில் நெல் மூட்டை சரிந்து உயிரிழந்த சின்னபொண்ணு குடும்பத்திற்கு 5 லட்சம், காயமடைந்த சகுந்தலாவுக்கு 75,000 என, நிவாரண உதவி வழங்கினார்.
பின், அவர் கூறுகையில், ''தமிழகத்துக்கு தர வேண்டிய நீரை கர்நாடக அரசிடம் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறோம். நம் உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம்; தமிழக முதல்வர் விஜய் பெற்றுத் தருவார். எதிர்க்கட்சித் தலைவரின் பணியே, ஏதாவது சொல்லிக்கொண்டே இருப்பது தான்.
''மேகதாதுவில் அணை கட்டாமல் தடுப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. கர்நாடக அரசு, பல ஆண்டுகளாக பல விதமாக சொல்லிக் கொண்டு வந்தாலும், தமிழக அரசு அவ்வளவு எளிதில் விட்டுக் கொடுக்காது,'' என்றார்.