வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்தில் நாள் ஒன்றுக்கு 1200 டன் உப்பு உற்பத்தி சீசன் நேரத்தில் தொடரும் அவலம்

சிக்கல்: ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகளவு உப்பு உற்பத்தியாகும் இடமாக வாலிநோக்கம் உப்பளம் உள்ளது. 1974ம் ஆண்டு தமிழ்நாடு அரசு உப்பு நிறுவனம் துவக்கப்பட்டது. வாலிநோக்கம் உப்பளத்தை சுற்றியுள்ள கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் இந்நிறுவனம் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. 5.524 ஏக்கரில் அமைந்துள்ளது.

இயற்கையான முறையில் சூரிய ஒளி மூலம் கடல் நீரை ஆவியாக்கி உப்பு உற்பத்தி செய்யும் மிகப்பெரிய அரசு தளமாக இயங்கி வருகிறது. இங்கு சாதாரண கல் உப்பு மட்டுமின்றி ஊட்டச்சத்து குறைபாடுகளை போக்கக்கூடிய அயோடின் கலந்த உப்பு மற்றும் இரும்பு சேர்த்து கலந்த இரட்டை சத்து செறிவூட்டப்பட்ட உப்பு போன்றவை தயாரிக்கப்படுகின்றன.

தற்போது கொளுத்தும் கோடை வெயிலின் தாக்கத்தால் சீசன் நேரமாக உள்ளதால் நாள் ஒன்றுக்கு 1000 முதல் 1200 டன் உப்பு இங்கு உற்பத்தியாகிறது. வாலிநோக்கம் கடல் பகுதியில் இருந்து பெரிய ராட்சத குழாய்கள் மூலமாக கடல் நீரை பம்பிங் செய்யப்பட்டு 1200 ஏக்கரில் பெரிய தெப்பம் அமைத்து உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் 850 பேர் பணிபுரிகின்றனர்.

கடந்த ஒரு மாதமாக சீசன் நேரத்தில் உப்பு பெரும்பாலும் ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் உப்பு பெருவாரியாக ஏற்றுமதி ஆகாமல் பாத்திகளிலும் வரத்து பகுதிகளிலும் மலைக்குன்று போல் குவிந்துள்ளது. ஒரு கிலோ பேக்கிங் மூலமாக நெய்தல் அரசு உப்பு, ரேஷன் கடைகளுக்கு இங்கு இருந்து உரிய முறையில் துாள் உப்பாகவும், கல் உப்பாகவும் அயோடின் சேர்க்கப்பட்டு சரக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வாலிநோக்கம் உப்பு பிரசித்தி பெற்றது. பொதுவாக சீசன் சமயத்தில் 30 முதல் 40 டன் வரை ஒரு பெரிய லாரியில் ஏற்றி செல்வது வழக்கம். கடந்த ஒரு மாதமாக உப்பு ஏற்றி செல்வதற்கு முறையான லாரிகள் வராததால் தேங்கி நிற்கிறது. இதற்கான காரணத்தை கண்டறிய வேண்டிய தமிழ்நாடு உப்பு நிறுவன அதிகாரிகள் மவுனமாகவே உள்ளனர்.

ஆட்சி மற்றும் அரசியல் மாற்றத்தால் ஏதேனும் குளறுபடி நிகழ்ந்துள்ளதா என தெரியவில்லை. முன்பு பல்வேறு உப்பு தேவை உள்ள பகுதிகளுக்கு செல்லும் உயர் அலுவலர்கள் அவற்றை கொள்முதல் செய்வதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். தற்போது இது மாதிரியான நடவடிக்கை ஏதும் இல்லாமல் உள்ளது. எனவே புதிய அரசு முறையாக அரசு அலுவலர்களை பணி செய்ய முடுக்க வேண்டும்.

எனவே ஜூலை 10ம் தேதிக்குள் உப்பள தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவார்கள். தற்போது 11தேதிக்கும் மேலாகியும் சம்பளம் வரவு வைக்கப்படாத நிலை தொடர்கிறது. எனவே இவ்விஷயத்தில் தமிழக அரசு உரிய வழிகாட்டுதலை வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

–––

Advertisement