தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: கலெக்டர்

நாமக்கல்:'தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, நாமக்கல் கலெக்டர் மதுபாலன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் மாவட்டத்தில் இயங்கி வரும் சில தனியார் பஸ்களில், அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக, மாவட்ட நிர்வாகத்திற்கும், வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கும் புகார்கள் வந்தன. நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு வழித்தடங்களில் இயங்கும் தனியார் பஸ்கள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கட்டண பட்டியலின் படியே பயணிகளிடம் கட்டணம் வசூலிக்க வேண்டும்.
கூடுதல் கட்டணத்தை தடுக்க, நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர்களால், சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்படும். விதிகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பஸ்கள் மீது, மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து விதிமீறலில் ஈடுபடும் பஸ்கள் மீது நடவடிக்கை எடுத்து, அதன் அனுமதிச்சீட்டு ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement