நலம் ஏ.ஐ., செயலியில் வாட்ஸ்ஆப் எண்ணில்வீட்டில் இருந்தவாறு வெளிநோயாளி சீட்டு பதிவு விருதுநகர் அரசு மருத்துவமனையில் அறிமுகம்

விருதுநகர், ஜூலை 14 -

விருதுநகர் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் ஆலோசனை, சிகிச்சை பெற வீட்டில் இருந்தவாறு நலம் ஏ.ஐ., செயலியில் 96192 22999 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் விவரங்களை பதிவு செய்து வெளிநோயாளிகளுக்கான சீட்டு பெறலாம். அதன் பின் மருத்துவமனையில் ஆதார் எண், அலைபேசி ஓ.டி.பி., கொடுத்து பதிந்து சீட்டு பெறுவதற்கான ஏற்பாடுகளை மருத்துவமனை நிர்வாகம் செய்துள்ளது.

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் வெளிநோயாளுக்கான சீட்டு பதிவு செய்ய தற்போது ஆதார் கார்டு, அதனுடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண்ணிற்கு வரும் ஓ.டி.பி., எண் பதிவு செய்தால் மட்டுமே சீட்டு பதிவு செய்து கொடுக்கப்படுகிறது. இதனை மேலும் எளிதாக்க தற்போது நலம் ஏ.ஐ., செயலி நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

நலம் ஏ.ஐ., செயலி 96192 22999 என்ற வாட்ஸ்ஆப் எண்ணுடன் செயல்படக்கூடியது. இந்த எண்ணை அலைபேசியில் சேமித்து வைத்து வாட்ஸ்ஆப்பில் வணக்கம் என்று செய்தி அனுப்ப வேண்டும். அந்த பதிவுக்கு வரும் பதிலுக்கு யாருக்கு மருத்துவ ஆலோசனை, சிகிச்சை தேவையோ அவரின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

அதன் பின் மருத்துவத்துறை, தேதி, மருத்துவரை தேர்ந்தெடுத்து வெளிநோயாளிகளுக்கான சீட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். உங்களின் பதிவு குறுஞ்செய்தி, வாட்ஸ்ஆப் மூலம் உறுதி செய்யப்படும்.

இதற்காக கொடுக்கப்படும் தனி எண்ணை விருதுநகர் அரசு மருத்துவமனையில் வெளிநோயாளிகள் சீட்டு பதிவு செய்யும் கவுண்டரில் சென்று ஆதார் கார்டு, அதனுடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண்ணை கொடுத்தால் சில நிமிடங்களில் வெளிநோயாளிகள் சீட்டு பதிவு செய்து கொடுக்கப்படும்.

இந்த புதிய நடைமுறையால் வீட்டில் இருந்தவாறு வெளிநோயாளிகளுக்கான சீட்டு பதிவுகளை எந்த நாள் வேண்டும் என்பதை தேவைக்கு ஏற்ப பதிவு செய்து எளிதாக கவுண்டரில் வெளிநோயாளி சீட்டு பெற முடியும். இதனால் நீண்ட வரிசையில் காத்திருப்பது தவிர்க்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.  

 

Advertisement