ரூ.14 கோடி வங்கி மோசடியில் வழக்குப்பதிய போலீசார் தாமதம்

தேனி:தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளைகளில் ரூ.14 கோடி நகைக்கடன் மோசடியில் தேனி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்ய தாமதிக்கின்றனர்.

சின்னமனுார் அருகே ஓடைபட்டியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளர் ஒருவர் ஜூனில் கூழையனுார் வங்கிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் இரு வங்கிகளிலும் வாடிக்கையாளர்கள் பெயரில் 100க்கும் மேற்பட்ட கணக்குகள் துவங்கி போலியாக நகைகளை அடகு வைத்து ரூ.14 கோடி மோசடி நடந்துள்ளது. இந்த விபரம் அண்மையில் வங்கியில் நடந்த தணிக்கையில் இம்மோசடி தெரிந்தது. இதில் மேலாளர், அவருக்கு உடந்தையாக சில வங்கி அதிகாரிகள் இருந்தனர்.

இதுபற்றி அவ்வங்கியின் மண்டல பொது மேலாளர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கடந்த ஜூலை 6ல் புகார் செய்தார். ஆனால் இதுவரை போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் கால தாமதம் செய்கின்றனர். மோசடியில் ஈடுபட்ட அதிகாரி இதுவரை விசாரணைக்கு அழைக்கவில்லை. மேலும் வழக்குப்பதியாமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. மோசடியில் தொடர்புடைய வங்கிகளில் நகைக்கடன் வைத்துள்ள வாடிக்கையாளர்கள் நகைகளை திருப்புவதிலும், வங்கி லாக்கரிலும் நகை இருப்பதை உறுதி செய்ய குவிவதாக ஓடைப்பட்டி வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement