அமெரிக்கா கடும் தாக்குதல்; ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியது ஈரான்

5



நமது நிருபர்




ஈரான் மீண்டும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதுடன், சைப்ரஸ் நாட்டு கப்பலையும் தாக்கியது; அமெரிக்கா புதிய தாக்குதல்கள் மூலம் பதிலடி கொடுத்தது.

மேற்காசிய நாடான ஈரானுடன், அமெரிக்கா - இஸ்ரேல் படைகள் இணைந்து கடந்த பி ப்ரவரி இறுதியில் தாக்குதலை தொடங்கின. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர நடந்த பேச்சில், தற்காலிக அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் ஒப்பந்தத்தை மீறும் வகையில், சமீபத்தில் ஹார்முஸ் ஜலசந்தியை ஒட்டிய பகுதியில் சென்ற மூன்று வணிக கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

இதில் கோபமடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் உடனான போர் நிறுத்தம் முடிவுக்கு வருவதாக அறிவித்தார். மேலும், ஈரானுடன் பேச்சு நடத்துவதில் எவ்வித பிரயோஜனமும் இல்லை என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் ஈரான் மீண்டும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதுடன், சைப்ரஸ் நாட்டு கப்பலையும் தாக்கியது. இதற்கு பதிலடி கொடுக்க அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.

இது குறித்து அமெரிக்கப்படை மத்திய தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஹார்முஸ் ஜலசந்தியில் பயணித்துக் கொண்டிருந்த சைப்ரஸ் நாட்டுக்குச் சொந்தமான கப்பல் மீது ஈரான் அப்பட்டமான தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து, அமெரிக்கா ஈரான் மீது இந்த வாரத்தின் மூன்றாவது கட்டத் தாக்குதல்களைத் தொடங்கியது. இத்தாக்குதலில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் இயந்திர அறையில் ஏற்பட்ட கடுமையான சேதம் காரணமாக அக்கப்பலால் தனது பயணத்தைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வணிகக் கப்பல்கள் மீதான முந்தைய தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்க வைக்கப்பட்ட பிறகு, புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் கடைப்பிடிப்பதை நிரூபிக்க ஈரானுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது; ஆனால், ஈரான் மீண்டும் அதில் தோல்வியடைந்துள்ளது.

இதற்குப் பதிலடியாக, அந்த ஜலசந்தியில் தடையின்றி பயணிக்கும் மாலுமிகள் மற்றும் வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தும் ஈரானின் திறனைத் தொடர்ந்து முடக்குவதன் மூலம், அந்நாட்டிற்கு அமெரிக்கா கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தத் தாக்குதல்கள் தலைமைத் தளபதியின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


@block_G@

மூடியது!

மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் அமெரிக்கா தனது தலையீட்டை நிறுத்தும் வரை, முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கும் என ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை தெரிவித்தது. மறு அறிவிப்பு வரும் வரை மூடுவதாக அறிவித்துள்ளது.block_G

Advertisement