சாலையில் கண்டெடுத்த 5 பவுன் தங்க நகை; போலீசில் ஒப்படைத்த கட்டுமான தொழிலாளர்களுக்கு சபாஷ்!

7

-நமது நிருபர்-


சாலையில் கண்டெடுத்த ஐந்தே கால் பவுன் தங்க நகையை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்த கட்டுமானத் தொழிலாளர் இருவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே புதுப்பட்டியை சேர்ந்தவர் சத்யா(45). அதே ஊரை சேர்ந்தவர் சசிகலா(44). கட்டட தொழிலாளிகள். இவர்கள் இருவரும் நேற்று சமுத்திராபட்டிக்கு கட்டிட வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது சமுத்திராபட்டி குளக்கரை பகுதியில் சாலையில் கேட்பாரற்று ஒரு பர்ஸ் கிடந்தது.

அதை எடுத்த இருவரும் திறந்து பார்த்த போது அதற்குள் ஐந்தே கால் பவுன் தங்க நகை இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து நத்தம் காவல் நிலையம் சென்ற இருவரும் நகையை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் திண்டுக்கல்- தண்டல்காரன்பட்டியை சேர்ந்த சிவக்குமார், 30,- சினேகா, 23, ஆகியோர் சேக்கிபட்டி உறவினர் வீட்டு விசேஷத்திற்கு பைக்கில் சென்ற போது தவற விட்டது தெரியவந்தது.

அவர்களை வரவழைத்த போலீசார் உரிய ஆவணங்களை சரி பார்த்து அவர்களிடம் நகையை ஒப்படைத்தனர். சாலையில் கண்டெடுத்த நகையை, நேர்மையுடன் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்த தொழிலாளர்கள் சத்யா, சசிகலா ஆகியோரை நத்தம் போலீஸ்-இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன், எஸ்.ஐ., அபினேஷ் உள்ளிட்ட போலீசாரும், நகையை பெற்று கொண்ட தம்பதியினரும் பாராட்டினர்.

Advertisement