அங்கீகாரம், அனுமதி பெற திமுக ஆட்சியில் லஞ்சம்; இதுவரை 59 தனியார் பள்ளிகள் புகார்

15

நமது நிருபர்


அங்கீகாரம் பெறுவதற்காக, திமுக முன்னாள் நிர்வாகி அரசகுமாரிடம் லஞ்சம் கொடுத்து ஏமாந்த 59 தனியார் பள்ளி நிர்வாகத்தினர் இதுவரை போலீசில் புகார் அளித்துள்ளனர்.

திமுக நிர்வாகியான அரச குமார், தனியார் பள்ளி சங்கம் ஒன்றை பெயரளவுக்கு நடத்தி வந்தார். ஆளும் கட்சியிலும், அரசிலும் இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி, தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெறுவது, புதுப்பித்தல் செய்வது போன்ற வேலைகளை செய்து வந்தார்.

இதற்கென கணிசமான தொகையை லஞ்சமாக பெற்று வந்தார். இப்படி லஞ்சம் கொடுத்த பலருக்கு வேலையை செய்து கொடுக்காமல் மோசடி செய்து விட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
தவெக ஆட்சிக்கு வந்தவுடன், அரசகுமார் கைது செய்யப்பட்டார். அவர் கைதான நிலையில், அவரிடம் லஞ்சம் கொடுத்த தனியார் பள்ளி நிர்வாகத்தினர் பலர் புகார் அளிக்க தொடங்கியுள்ளனர்.

இதுவரை 59 பள்ளிகள் புகார் அளித்துள்ளனர். அவர்கள் கொடுத்த லஞ்சப்பணம் ரூ.7.34 கோடி. இந்த புகார் அடிப்படையில் 24 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
லஞ்சமாக வசூலித்து மோசடி செய்த பணத்தில் எங்கெல்லாம் சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழகத்தில் இருக்கும் பல நுாறு பள்ளி நிர்வாகத்தினரிடம் அரசகுமார் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை லஞ்சமாக பெற்று மோசடி செய்திருப்பதாக புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement