கள ஆய்வு மீது நடவடிக்கை இல்லை தலைமை மீது தி.மு.க,வினர் விரக்தி :அ.தி.மு.க.,வினர் போல் அணி மாற வாய்ப்பு

1

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க., ஆட்சியை த.வெ.க.,விடம் இழந்தது. தி.மு.க.,வின் தோல்விக்கான காரணம் குறித்து ஆராய்ந்து அறிக்கையை கட்சித் தலைமைக்கு கொடுக்கும் வகையில், 36 பேர் கொண்ட 19 குழுக்களை கட்சியின் தலைவர் ஸ்டாலின் நியமித்தார்.

ஒவ்வொரு குழுவிலும் தலா 2 பேர் உள்ள நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் தோல்வியடைந்த தொகுதிகளில் நேரடியாக கள ஆய்வு செய்து, கட்சி நிர்வாகிகளிடம் தனித்தனியாக கருத்துகள் கேட்கப்பட்டது.

இதில், தேர்தலில் வேலை செய்யாத நிர்வாகிகள் உள்ளிட்டவைகளை தோல்விக்கான காரணங்களாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதில் பெரும்பாலானவர்கள் மாவட்ட நிர்வாகியை மாற்றி இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

ஆனால், புகாரில் கூறியபடி கட்சித் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் கள ஆய்வுக் குழுவினர் கண்டறிந்த புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காத்து வருகிறது.

இது மாவட்டத்தில் உள்ள அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கள ஆய்வு அறிக்கை கிடப்பில் உள்ள நிலையில், தற்போது புதிதாக தி.மு.க., கிளைக்கழகம் முதல், தலை​மைக் கழகம் வரை ஒரே சீரான மறுசீரமைப்பு மற்​றும் மறுகட்​டமைப்பு பணி​களை மேற்​கொள்​வதற்​காக 10 பேர் கொண்ட ஆலோ​சனைக் குழுவை தலைவர் ஸ்டாலின் லண்டன் செல்வதற்கு முன் நியமித்துள்ளார்.

இதில் முன்​னாள் அமைச்​சர்​கள் தங்​கம் தென்​னரசு, கீதா ஜீவன், சக்​கர​பாணி, சிவசங்​கர் உட்பட 10 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர் தமிழகம் முழு​தும் ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று கட்சியின் மறு சீரமைப்பு, தேர்தல் பணிகளை தொய்வின்றி செய்வதற்கான நிரந்தர அமைப்பு, தேர்தல் தோல்வி உள்ளிட்டவைளை ஆராய்ந்து, லண்டனிலிருந்து ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு வந்த பின் அறிக்கை தர உள்ளனர்.

ஏற்கனவே விழுப்புரம் மாவட்டத்தில் தி.மு.க., தலைமை மூலம் நேரடியாக வந்து கள ஆய்வுக் குழுவினர் அறிக்கை மீது கட்சித் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது புதியதாக நியமிக்கப்பட்ட மறுசீரமைப்பு குழு அறிக்கை மீது கட்சி தலைமை என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது. இதுவும் கண் துடைப்பாக நடந்ததாக கட்சியினர் மத்தியில் பேசப்படுகிறது.

தேர்தலுக்குப்பின், ஆரம்ப காலத்திலிருந்து விழுப்புரம் மாவட்டத்தில் தி.மு.க.,விற்கு உழைத்த நிர்வாகிகள் பலர் த.வெ.க.,விற்கு மாறி விட்டனர். தற்போதுள்ள நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் புதிய நிர்வாகிகள் நியமிக்காமல் காலம் தாழ்த்தி வந்தால், கட்சி தலைமை மீது வெறுப்பில் உள்ள நிர்வாகிகள் அ.தி.மு.க.,வில் நடப்பது போன்று த.வெ.க., பக்கம் கொத்துக் கொத்தாக செல்வதற்கு தயாராகி விடுவர் எனவும் கட்சியினர் மத்தியில் கருத்து நிலவுகிறது.

Advertisement