குடியிருப்பு பகுதியில் உள்ள பார்களை மூட வேண்டும் :திருபுவனை எம்.எல்.ஏ., கோரிக்கை

புதுச்சேரி: குடியிருப்பு பகுதிகளில் உள்ள பார்களை மூட வேண்டும் என சாய்சரவணன்குமார் எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கலால் துறை துணை ஆட்சியர் மேத்யூபிரான்சிஸிடம் அளித்த மனு:

திருபுவனை தொகுதியில் குடியிருப்புகள், பள்ளிகள், கோவில்கள் அருகில், இயங்கி வரும் ரெஸ்டோ பார்களால் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் உருவாகிறது. பள்ளிகள், கோவில்கள் மற்றும் குடியிருப்பு அருகில் இயங்கும் ரெஸ்டோ பார்களை மூட வேண்டும். மூடுவது சாத்தியமில்லாத இடங்களில், அவற்றை கிராம எல்லைகளுக்கு வெளி அமைக்க வேண்டும்.

திருபுவனை தொகுதியில் உள்ள அனைத்து ரெஸ்டோ பார்களிலும் கலால் விதிகள் மற்றும் உரிம நிபந்தனைகள் பின்பற்றப்படுகிறதா என ஆய்வு செய்ய வேண்டும். சட்ட விதிகளை மீறும் பார்களின், உரிமங்களை சஸ்பெண்ட் அல்லது ரத்து செய்ய வேண்டும்.

உறுதியான நடவடிக்கை எடுக்காவிட்டால், கலால் ஆணையர் அலுவலகம் முன் போராட்டம் நடைபெறும். திருபுவனை பஸ் ஸ்டாப் அருகில் இயங்கும் நேத்ரா ரெசிடென்சி ரெஸ்டோ பாரால், பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பாதிக்கின்றனர். எனவே அது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு அளித்த பின், கலால் அலுவலகம் முன் திருபுவனை தொகுதி பெண்களுடன், சாய்சரவணன்குமார் எம்.எல்.ஏ., கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்.

Advertisement