மின்வாரிய அலுவலகத்திற்கு புது கட்டடம் கோரும் மக்கள்

சதுரங்கப்பட்டினம்: சதுரங்கப்பட்டினத்தில் வாடகை கட்டடத்தில் இயங்கும் மின்வாரிய அலுவலகத்திற்கு, சொந்த இடம் வழங்கி புது அலுவலகம் கட்ட, பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர். கல்பாக்கம் அடுத்த, சதுரங்கப்பட்டினம் பகுதியில், மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இந்த அலுவலக கட்டுப்பாட்டில் சதுரங்கப்பட்டினம், புதுப்பட்டினம், வாயலுார் ஆகிய ஊராட்சிப் பகுதிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படுகிறது.

மின் கட்டணம் செலுத்தவும், மின் இணைப்பு பழுது, மின்தடை உள்ளிட்ட புகார்கள் தெரிவிக்கவும் பொதுமக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.

இந்த அலுவலகம் தனியாருக்கு சொந்தமான குறுகிய கட்டடத்தில் மாத வாடகைக்கு இயங்கி வருகிறது. இதனால், மின் இணைப்பு கோர வரும் மக்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்களும், இடநெருக்கடியால் சிரமப்படுகின்றனர்.

சதுரங்கப்பட்டினம் மின்வாரிய அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.

அதன்படி, இரு ஆண்டுகளுக்கு முன் வெங்கப்பாக்கம் பகுதியில் புதிய அலுவலகம் கட்ட மின்வாரிய நிர்வாகம் முடிவெடுத்ததது. இதற்கு சதுரங்கப்பட்டினம் ஊராட்சி நிர்வாகம் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், 2 கி.மீ., துார தொலைவில் மின்வாரிய அலுவலகம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

தங்கள் பகுதியிலே இடம் ஒதுக்க வலியுறுத்தியதால், சிக்கல் நீடிக்கிறது. அதே பகுதியில் இடம் ஒதுக்கி புதிய அலுவலகம் கட்ட, தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement