அக்காமலை ரோட்டில் வாகன ஓட்டுநர்கள் அவதி

வால்பாறை: அக்காமலை எஸ்டேட் செல்லும் குறுகலான ரோட்டை விரிவுபடுத்த வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வால்பாறையிலிருந்து, 13 கி.மீ., தொலைவில் அக்காமலை எஸ்டேட் அமைந்துள்ளது. இங்கிருந்து இரண்டு கி.மீ.,ல் அக்காமலை கிராஸ்ஹில்ஸ் பகுதி உள்ளது. இந்நிலையில் அக்காமலை எஸ்டேட் பகுதிக்கு, வால்பாறையிலிருந்து காலை முதல் இரவு வரை அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இது தவிர, நுாற்றுக்கணக்கான சுற்றுலா வாகனங்களும் இந்த ரோட்டில் செல்கின்றன. நகராட்சி சார்பில் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த ரோடு, மிகவும் குறுகலாக உள்ளதால், எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விட முடியாத நிலை உள்ளது.

வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது:

அக்காமலை எஸ்டேட் வழித்தடத்தில் பாலாஜிகோவில், ஊசிமலை, வெள்ளமலை பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், கருமலையிலிருந்து அக்காமலை செல்லும் ஐந்து கி.மீ., துாரம் உள்ள ரோடு மிகவும் குறுகலாக உள்ளது. வாகனங்கள் எதிர் எதிரே வரும் போது, வழி விட முடியாத நிலையில், சில நேரங்களில் விபத்து ஏற்படுகிறது.

பொதுமக்களின் நலன் கருதி  கருமலை எஸ்டேட் முதல், அக்காமலை வரையிலான ரோட்டை விரிவுபடுத்த நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ணே்டும்.

இவ்வாறு, கூறினர்.

Advertisement