எதிர்ப்பால் சுத்திகரிப்பு நிலைய பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு
காரைக்குடி:புதுவயல் பேரூராட்சியில் பொதுமக்கள் எதிர்ப்பால் சுத்திகரிப்பு நிலைய பணிகளை ஒரு மாதம் தற்காலிகமாக நிறுத்தி வைக்க சமாதான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
புதுவயல் பேரூராட்சி நடராஜபுரம் வள மீட்பு பூங்காவில், ரூ.5.40 கோடி மதிப்பீட்டில், சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வார்டு 1 முதல் 7 மற்றும் 15 வது வார்டு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என வார்டு 8 முதல் 14 வார்டு பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தொடர் போராட்டத்தால் ஏற்பட்ட பதட்டம் காரணமாக போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று காரைக்குடி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ராஜா தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் குடிநீர் வடிகால் வாரியம் தரச் சான்று பெற்று பொதுமக்கள் ஆதரவோடு நீர்வரத்து கால்வாய்களை பாதிக்காத வண்ணம் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அல்லது பொதுமக்கள் விரும்பாத பட்சத்தில் நீதிமன்றம் மூலம் பரிகாரம் தேடி கொள்ளலாம். அல்லது புதுவயல் பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு மக்களிடம் கருத்து கேட்கும் திட்டத்தை செயல்படுத்தலாம். அல்லது புதுவயல் பேரூராட்சி மன்ற கூட்டத்தை கூட்டி தீர்வு காணலாம் என முடிவு செய்யப்பட்டது. முடிவுகளை ஒரு மாத கால அவகாசத்திற்குள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அதுவரை கட்டுமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.