தடுப்பணை உயரத்தை குறைக்க அதிகாரிகள் மறுப்பு: விவசாயிகள் தர்ணா

சிங்கம்புணரி:சிங்கம்புணரி அருகே பாலாற்றில் தடுப்பணை உயரத்தை குறைக்க அதிகாரிகள் மறுத்ததால் விவசாயிகள் தாலுகா அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம் பொட்டப்பட்டி, சூரப்பட்டி அருகே பாலாற்றில் ரூ. 9 கோடி செலவில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. இந்த அணை கட்டப்பட்டால் சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட கீழ்நிலைப் பகுதிகளுக்கு தண்ணீர் வருவது தடைபடும் என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கடை அடைப்பு, உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை 6:00 மணிக்கு சிங்கம்புணரி தாலுகா அலுவலகத்தில் தேவகோட்டை ஆர்.டி.ஓ., தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் சிங்கம்புணரி தாசில்தார் நாகநாதன், சிவகங்கை, மதுரை மாவட்ட பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். தடுப்பணையை நிறுத்த முடியாவிட்டாலும் அதன் உயரத்தை ஐந்து அடியில் இருந்து மூன்று அடியாக குறைக்க விவசாயிகள் வலியுறுத்தினர். ஆனால் மதுரை மாவட்ட அதிகாரிகள் தடுப்பணை உயரத்தை 5 அடிக்கு கீழே குறைக்க முடியாது, என திட்டவட்டமாக கூறினர். இதனால் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து தாலுகா அலுவலக வாசலில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

Advertisement