துாய்மை பணியாளர்களுக்கு இனி சுடச்சுட மதிய உணவு காலை உணவு கெட்டு விடுவதால் மாற்றம்
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மை பணியில் நிரந்தர, ஒப்பந்த பணியாளர்கள் என்று சுமார் 10,000 பேர் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு மாநகராட்சி சார்பில் காலை உணவு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதற்காக 3 ஆண்டுகளுக்கு ரூ.45 கோடிக்கு தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. ஆனால் தூய்மை பணியாளருக்கு வழங்கப்பட்ட உணவு சுகாதாரமாக இல்லை என்று புகார் எழுந்தது.
அதிகாலையே உணவு தயாரிக்கப்படுவதால், விரைவில் கெட்டுவிடுவதாகவும் அவ்வபோது புழு, பூச்சி விழுவதாகவும் புகார் எழுந்தது. இதனால் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவுக்கு பதிலாக, மதிய உணவு வழங்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
துாய்மை பணியாளர்கள் பெரும்பாலும் காலை 6 மணிக்கே பணிகளை துவங்குவதால், காலை உணவை தாமதமாக தான் உட்கொள்கிறார்கள். அதனால் மதிய உணவு கொடுக்க முடிவு செய்து கடந்த 15 நாட்கள் சோதனை அடிப்படையில் ஆய்வு செய்தோம்.
அவர்களுக்கு மதிய உணவு மிகவும் பிடித்துவிட்டது. அதனடிப்படையில் மதிய உணவு திட்டத்தை அமல்படுத்தியுள்ளோம். தற்போது மாநகராட்சியில் 9,454 தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவு கொடுக்கப்படுகிறது. மொத்தம் 106 இடங்களில் உணவு வழங்கப்படும்.
நண்பகல் 11.50 மணியில் இருந்தே உணவு தயாராக இருக்கும். வெஜிடபிள் பிரியாணி, பருப்பு சாதம், வெள்ளை சாதம், சாம்பார், குழம்பு என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உணவு கொடுக்க திட்டமிட்டுள்ளோம்.
காய்கறி, புரதச்சத்து அதிகம் இருக்கும் உணவு வழங்கப்படும். காலை உணவில் ஒரு தூய்மை பணியாளருக்கு ரூ.40 வீதம் செலவிடப்பட்டது. மதிய உணவுக்காக ரூ.50 செலவிடப்படும். இதற்கேற்ப தனியார் ஒப்பந்தத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.
தூய்மை பணியாளர் ராமசாமி கூறுகையில், நான் 20 ஆண்டுகளாக தூய்மை பணியாளராக இருக்கிறேன். பணியாளர்களும் காலை பணிகளை முடித்துவிட்டு நண்பகல் தான் சாப்பிடுவோம். அதற்குள் உணவு கெட்டுவிடும். மதிய உணவு மிகவும் திருப்தியாக உள்ளது. முடிந்தவரை சாதம், குழம்பு கொடுத்தால் போதும் என்றார்.
மேலும்
-
புதுச்சேரி போலி மருந்து விசாரணையில் 'பகீர்': சட்ட விரோத தமிழக குடோனுக்கு 'சீல்' :625 வகை மாத்திரைகள் தயாரித்தது அம்பலம்
-
எதிர்ப்பால் சுத்திகரிப்பு நிலைய பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு
-
2 டன் அரிசி கருகியது
-
காரைக்குடியில் இருந்து இயங்கும்எக்ஸ்பிரஸ், பாசஞ்சர் ரயில்கள் மானாமதுரை வரை நீட்டிக்கப்படுமா
-
காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
-
புத்தகங்கள் வாங்குவதை ஊக்குவிக்க மாணவர்களுக்கு சேமிப்பு உண்டியல்