நுகர்வு போதை கலாசாரத்தால் சீரழியும் மாணவர்கள்; வீட்டிலும், பள்ளியிலும் கண்காணிப்பது எப்படி

1

மதுரை: தமிழகத்தில் நுகர்தல் முறையில் சிந்தடிக் போதையை பயன்படுத்தும் மாணவர்களிடம் அதற்கான அறிகுறிகளோ அடையாளங்களோ இல்லாததால் இந்த கலாசாரம் கவலை அளிப்பதாக மனநல டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

டாக்டர்கள் கூறியதாவது:
தமிழகத்தில் 2022ல் அரசு மருத்துவமனைகளில் கலங்கரை என்ற பெயரில் 7 மதுபோதை மீட்பு மையங்கள் திறக்கப்பட்டன. 2025ல் 25 மையங்களாக அதிகரிக்கப்பட்டது. போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் குற்றங்களை தடுப்பதும், அவர்களை மீட்பதும் இம்மையங்களின் நோக்கம். அவர்களை சமுதாயத்தோடு ஒருங்கிணைக்க வேண்டும். இதற்கென மனநல டாக்டர்கள், கவுன்சிலர்கள், சமூகப் பணியாளர்கள் குழுவாக செயல்படுகின்றனர்.

சிந்தடிக் பொருட்களை, சிந்தடிக் மருந்துகளை நுகரும் கலாசாரம் தற்போது அதிகரித்து விட்டது. ஆல்கஹால், கஞ்சாவை பயன்படுத்தும் போது அதன் வாசனை வெளியே தெரியும். வீட்டிலும் வெளியிலும் (போலீசாரிடம்) மாட்டிக் கொள்வதற்கும் வாய்ப்புள்ளது. ஆனால் சிந்தடிக் பொருட்களை நுகரும் போதை கலாசாரத்தில் போலீசாரால் கண்டு பிடிக்க முடியாது. குடும்பத்தினர் கண்டுபிடிப்பது சவாலான விஷயம். தன் வயதையொத்த குழுவில் உள்ளவர்களால் எளிதில் துாண்டப்பட்டு இந்த போதை கலாசாரத்திற்குள் நுழைகின்றனர்.

இந்தியாவில் கஞ்சா பயன்பாடு 1.20 சதவீதமாகவும் ஓபியாய்டு பயன்பாடு 1.08 சதவீதமாகவும் உள்ளது. அதேநேரத்தில் தமிழகத்தில் கஞ்சா பயன்பாடு 0.20 சதவீதமாகவும் ஓபியாய்டு பயன்பாடு 0.26 சதவீதமாகவும் உள்ளது.

கண்காணிப்பது எப்படி



பிள்ளைகளின் பழக்கவழக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கண்காணித்தால் தெரிந்து விடும். திடீரென அடிக்கடி காசு கேட்பது, நன்றாக படிக்கும் பிள்ளை படிப்பில் கோட்டை விடுவது, தனிமையை விரும்புவது, திடீரென கோபப்படுவது, நண்பர்களை மாற்றுவது, புதிய நண்பர்களுடன் தொடர்பில் இருப்பது, கூட்டத்தில் தொடர்பில் இருப்பதை தவிர்ப்பது போன்ற நடவடிக்கைகளின் மூலம் தவறான பாதையில் செல்கின்றனரா என வீட்டிலும், பள்ளியிலும் உறுதி செய்யலாம்.

புத்தகப்பை, சட்டைப்பையில் ஏதாவது வித்தியாசமான பொருள், கவர் உள்ளதா என கண்காணிக்க வேண்டும். ஆரம்ப கட்டத்திலேயே அவர்களை மீட்டெடுத்தால் மற்ற போதைப் பொருட்களை அடுத்து பயன்படுத்துவதை தடுக்க முடியும். பள்ளிகளில் சக மாணவர்களின் வித்தியாச பழக்கவழக்கத்தை கண்டறிந்து மாணவர்கள் மூலமே கவுன்சிலிங் அளிப்பது பயன் தரும் என்றனர்.

Advertisement