மதுரையில் ஆன்லைன் மூலம் பலவிதங்களில் பணமோசடி; இன்னும் விழிப்புணர்வு இல்லாததால் புகார்கள் அதிகரிப்பு

1

மதுரை: மதுரையில் ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள், முதலீடு செய்து அதிக லாபம் சம்பாதிக்கும் எண்ணம் உள்ளவர்களை குறிவைத்து ஆன்லைனில் பலவிதங்களில் பணமோசடி நடந்து வருகிறது. இந்தாண்டு மட்டும் நுாற்றுக்கும் மேற்பட்ட புகார்கள் சைபர் கிரைமில் பெறப்பட்டுள்ளன.

மதுரை நாகமலை என்.ஜி.ஓ., காலனியைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற வனத்துறை பெண் அலுவலர். இவரது அலைபேசியில் தொடர்பு கொண்ட நபர், தன்னை இந்தியன் வங்கி மேலாளர் என அறிமுகப்படுத்திக்கொண்டு, 'உங்களது கே.ஒய்.சி., அப்டேட் செய்ய வேண்டும். ஓ.டி.பி., கூறுங்கள்' எனக்கேட்க, பெண் அலுவலரும் கூற, அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.5 லட்சம் எடுக்கப்பட்டது.

ஆட்டை காண்பித்து 'ஆட்டை'யை போட்ட ஆசாமி பெருங்குடியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவர், சமூகவலைதளத்தில் 'ஆட்டுக்குட்டி விற்பனை' எண்ணில் தொடர்பு கொண்டார். சில ஆட்டுக்குட்டிகளின் படத்தை வாட்ஸ் ஆப்பில் அந்நபர் அனுப்பி வைக்க, திருப்தியடைந்த ஆசிரியர், ஒரு ஆட்டுக்குட்டி மட்டும் தேவை என்றுக்கூறி ரூ.10 ஆயிரத்தை 'கியூ.ஆர்.' கோடு வழியாக அனுப்பி ஏமாந்தார்.

ரூ.15 லட்சம் மோசடி தோப்பூரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரின் டெலிகிராமில் நாககணேஷ் என்பவர் தொடர்பு கொண்டு 'பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம்' என்றார். அவர் சொன்ன நிறுவனங்களின் பங்குகளில் ஊழியர் முதலீடு செய்தார்.

அவரது பங்குசந்தை கணக்கில் லாபம் இருப்பது போல் காண்பிக்க, அதை எடுக்க முயன்றபோது முடியவில்லை. 'லாபத் தொகையை எடுக்க ரூ.2.90 லட்சம் செலுத்த வேண்டும்' என நாககணேஷ் கூற, அதன்படி செலுத்தினார். இதன்பிறகும் லாபத் தொகையை எடுக்க முடியாதநிலையில் 'உங்களது பங்குசந்தை கணக்கு காலாவதியாகி விட்டது. அதை புதுப்பிக்க ரூ.2.25 லட்சம் செலுத்த வேண்டும்' என்றுக்கூற, அதன்படி செலுத்தினார். இதன்பிறகு லாபத்தொகை ரூ.44 லட்சம் காண்பித்தது.

அதை எடுக்க முடியாததால், தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்தார். மொத்தம் ரூ.15 லட்சம் இழந்துள்ளதாக போலீசில் புகார் செய்தார்.

ஆஸ்திரேலியா டூ மதுரை மதுரை கோரிப்பாளையத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் வாட்ஸ் ஆப்பில் 'பி.எம்., முத்ரா பைனான்ஸ்' பெயரில் தொடர்பு கொண்ட நபர், 'உங்களுக்கு ரூ.ஒரு லட்சம் கடன் வழங்க தயாராக இருக்கிறோம். அதற்கு பரிவர்த்தனை கட்டணம் செலுத்த வேண்டும்' என்றுக்கூறி சில ஆயிரம் ரூபாயை ஆன்லைனில் பெற்றார்.

இதைதொடர்ந்து ஆஸ்திரேலியாவில் இருந்து பேசுவதாக கூறி தொடர்பு கொண்டவர், 'உங்களுக்கு 5 ஆயிரம் டாலர் ரிசர்வ் வங்கி மூலம் அனுப்பி உள்ளேன். உங்கள் வங்கி கணக்கு எண்ணைக்கூறி பெற்றுக்கொள்ளுங்கள்' என்றுக்கூறி, ஜி.எஸ்.டி., உட்பட பல்வேறு வரிகள் செலுத்த வேண்டும் என்றுக்கூறி பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ.6 லட்சம் பெற்று மோசடி செய்தனர். இதுகுறித்தும் சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

போலீசார் கூறுகையில், ''வங்கியில் இருந்து பேசுவதாக கூறினால், வங்கிக்கே சென்று விசாரிக்க வேண்டும்.

எக்காரணத்தை கொண்டும் அறிமுகம் இல்லாதவர்கள் ஓ.டி.பி., எண் கேட்டால் தெரிவிக்கக்கூடாது. எஸ்.எம்.எஸ்., அல்லது வாட்ஸ் ஆப்பில் வங்கி பெயரில் 'லிங்க்' வந்தால் அதை பயன்படுத்தக்கூடாது. இந்தாண்டு மட்டும் மதுரையில் நுாற்றுக்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன.

அதில் 60க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்'' என்றனர்.

Advertisement