செமிகண்டக்டர், மொபைல்போன் உற்பத்திக்கு ரூ.2 லட்சம் கோடி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

-நமது சிறப்பு நிருபர்-

இந்தியாவில் செமிகண்டக்டர் மற்றும் மொபைல் போன் உற்பத்தியை மேலும் விரிவுபடுத்தும் வகையில், மொத்தம் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், 'இந்தியா செமிகண்டக்டர் மிஷன் 2.0' என்ற திட்டத்திற்கு 1.27 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. முதல் கட்ட திட்டத்துக்கு 76,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டாம் கட்டத்தில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட செமிகண்டக்டர் திட்டத்தில், செமிகண்டக்டர் உற்பத்தி சாதனங்கள், சிறப்பு ரசாயனங்கள், முக்கிய மூலப்பொருட்கள், மேம்பட்ட பேக்கேஜிங் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்து, இறக்குமதி சார்பை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது.

அதேபோல், மொபைல் போன் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான பி.எல்.ஐ., 2.0 திட்டத்திற்கு 62,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யவும் அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது. மொபைல் போன் பி.எல்.ஐ., 2.0 திட்டம், நடப்பு நிதியாண்டு முதல் 2030 - 31 வரை ஐந்து ஆண்டுகள் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

@quote@

ஏற்றுமதியில் ஸ்மார்ட்போன் நம்பர் 1


கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா மொபைல் போன்களை இறக்குமதி செய்யும் நாடு என்ற நிலையிலிருந்து, ஏற்றுமதி செய்யும் நாடாக மாறியுள்ளது. தற்போது நாட்டில் 300க்கும் மேற்பட்ட மொபைல் உற்பத்தி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. 2025ம் ஆண்டில், 2.62 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஸ்மார்ட்போன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு, நாட்டின் மிக அதிக ஏற்றுமதி பொருளாக ஸ்மார்ட்போன்கள் உருவெடுத்துள்ளன.

- அஸ்வினி வைஷ்ணவ், மத்திய மின்னணு துறை அமைச்சர்quote

Advertisement