காமராஜர் துறைமுக சரக்கு திறன் 7 கோடி டன்களாக அதிகரிப்பு; 2047ல் 25 கோடி டன்னுக்கு உயர்த்த இலக்கு

சென்னை: 'காமராஜர் துறைமுகம் வரும் 2047ல், 254.50 மில்லியன் டன் சரக்குகள் கையாளும் அளவுக்கு, உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும் என, காமராஜர் துறைமுகத்தின் நிர்வாக இயக்குநர் ஐரீன் சிந்தியா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின், 124வது பிறந்த நாளையொட்டி, எண்ணுாரில் உள்ள காமராஜர் துறைமுகத்தில் அவரது படத்துக்கு, மரியாதை செலுத்திய துறைமுக நிர்வாக இயக்குநர் ஐரீன் சிந்தியா கூறியதாவது:

காமராஜரின் லட்சியங்களை வழிகாட்டுதலாக கொண்டு, நிலையான வளர்ச்சி, செயல்திறன் மேம்பாடு மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கான தனது பங்களிப்பை மேலும் வலுப் படுத்துவதில் காமராஜர் துறைமுக நிறுவனம் உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. கடந்த நிதி ஆண்டில், 4.90 கோடி மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டு, 1,280 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.

இந்த வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு, 'மாஸ்டர் பிளான்' 2047 தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய 7.04 கோடி டன் சரக்கு கையாளும் திறனை, வரும் 2047 ஆண்டுக்குள் 25.45 கோடி டன்னாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். இதற்கான, கட்டமைப்புகளை உருவாக்குவது, சரக்கு கையாளும் திறன் விரிவாக்கம், சாலை, ரயில் உள்ளிட்ட பன்முக போக்குவரத்து இணைப்பு வலுப்படுத்துவது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement