சிங்கப்பெண் அதிரடிப்படை போலீசை கலாய்த்த போதை நபர் மீது வழக்கு
விழுப்புரம்: விழுப்புரத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீசாரை போதையில் கலாய்த்த வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சப் இன்ஸ்பெக்டர் பிரபாவதி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு 10:30 மணியளவில் திருச்சி நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, விழுப்புரம் பெருந்திட்ட வளாகம் எதிரில் 2 வாலிபர்கள் மதுபோதையில் தகராறு செய்து கொண்டிருந்தனர்.
சப் இன்ஸ்பெக்டர் பிரபாவதி மற்றும் போலீசார், வாலிபர்களை எச்சரித்தனர். அப்போது, அந்த வாலிபர்கள் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை பிடிக்க முயன்றபோது தப்பியோடினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விழுப்புரம் மேற்கு போலீசார் விசாரணை நடத்தியதில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீசாரை கிண்டல் செய்தது விழுப்புரம் அடுத்த ஆனாங்கூர் வடக்குத்தெருவைச் சேர்ந்த தாமோதரன் மகன் திலிப்குமார், 28; என தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து நேற்று, சப் இன்ஸ்பெக்டரை பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டியதாக திலிப்குமார் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.