மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு கூட்டம்  

 கடலுார்: கடலுார், கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது.

விஷ்ணு பிரசாத் எம்.பி., தலைமை தாங்கினார். கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், எம்.எல்.ஏ.,க்கள்

ஜோதிமணி, மோகன் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் விஷ்ணுபிரசாத் எம்.பி., பேசியதாவது:

மத்திய அரசு திட்டங்கள் மற்றும் அதன் நோக்கம் சரியாக நிறைவேற்றப்படுவதை மாவட்ட அளவில் கண்காணித்து நிறைவேற்றுவது மற்றும் ஆலோசனைகள் வழங்குவது மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் பணியாகும். மத்திய அரசின் திட்டப்பணிகள் செயல்படுத்தும்போது மத்திய அரசு மற்றும் மாநில நிதியில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் ஏற்படும் இடர்பாடுகளை சரியான நேரத்தில் களைந்து அதற்கான தீர்வு கண்டு பணிகளை சிறப்பாக நிறைவேற்ற மாவட்ட நிர்வாகத்திற்கு வழிகாட்டியாக இந்தக்குழு செயல்படுகிறது.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் மத்திய அரசுத் திட்டங்களை செயல்படுத்துவதை கண்காணித்திடும் பொருட்டு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் காலாண்டிற்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.

கடலுார் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் தொடர்புடைய மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் திட்ட செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

ஊரக வளர்ச்சித்துறை மற்றும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள், ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகள், கழிவு நீர் கால்வாய்கள், வாய்க்கால்கள் துார்வாருதல் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளை துரிதமாக மேற்கொண்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

வேளாண், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறைகளில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், தேசிய வேளாண் மண் அட்டை இயக்கம், பிரதம மந்திரி பயிர்காப்பீடு திட்டம், மானாவாரி மேம்பாட்டு திட்டம், துளி நீரில் அதிக பயிர் திட்டம், வேளாண் இயந்திரமையமாக்கள் சார் இயக்க திட்டம், வேளாண் உட்கட்டமைப்பு நிதி போன்ற பல்வேறு திட்டங்களை துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

விவசாயிகளுக்கு துறை சார்ந்த திட்டத்தின் பயன்கள் உடனடியாக சேரவும் வேளாண்மை துறை அலுவலர்கள், விவசாயிகளுடன் இணைந்து பணியாற்றவும் அறிவுறுத்தப்பட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை கால்நடை பராமரிப்புத்துறை ஆகிய துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டுகர்ப்பிணி தாய்மார்களுக்கு முகாம் நடத்தி தேவையான ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் தடுப்பூசிகள்சரியான நேரத்தில் வழங்கவும் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து பெட்டகங்கள், எச்.ஐ.விகாசநோய், பரிசோதனைகளை மேற்கொள்ளவும் மருதுத்துவ காப்பீட்டு அட்டை போன்றவைபயனாளிகளுக்கு முறையாக வழங்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு கண்காணிக்கஅலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். மாநகராட்சி துணைமேயர் தாமரைசெல்வன், டி.ஆர்.ஓ., புண்ணியகோட்டி, கூடுதல் திட்ட இயக்குனர் பாலகணேஷ், மாநகராட்சி கமிஷனர் கிஷன்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 

Advertisement