கருவேல மரங்களால் நீராதாரம் பாதிப்பு விவசாயிகள் கவலை
மானாமதுரை, ஜூலை 18-
மானாமதுரை, இளையான்குடி நீர் நிலைகள், காலியிடங்களில் வளர்ந்துள்ள கருவேல மரங்களால் நீராதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
மானாமதுரை, இளையான்குடி பகுதி கண்மாய், குளங்கள், ஓடை, வரத்து கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகள், காலி இடங்களில் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது.மரங்களை அகற்ற மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருந்தும், பல இடங்களில் இதுவரை முழுமையாக அகற்றப்படவில்லை.
சீமைக்கருவேல மரங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் நீர்மட்டம் குறைவதுடன், மழைக்காலங்களில் நீர்நிலைகளில் நீர் சேமிக்கும் திறனும் பாதிக்கப்படுகிறது. பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் விவசாயம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவை முழுமையாக அமல்படுத்தி, மானாமதுரை, இளையான்குடி பகுதியில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை உடனடியாக அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலைகளை துார்வாரி, மழைநீர் சேமிப்பு மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.