மயான கொட்டகை கிராம மக்கள் கோரிக்கை

விருத்தாசலம்: உச்சிமேடு கிராமத்தில் தகனமேடை, மயானத்திற்கு பாதை வசதியின்றி 25 ஆண்டுகளாக கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

விருத்தாசலம் அடுத்த சாத்துக்கூடல் கீழ்பாதி ஊராட்சி, உச்சிமேடு கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

இப்பகுதி மக்கள் உயிரிழந்தால், ஊருக்கு வெளியில் உள்ள மயானத்திற்கு ஒன்றரை கி.மீ., தொலைவிற்கு சுமந்து சென்று தகனம் செய்து வருகின்றனர்.

மயானத்தில் தகனமேடை இல்லாமல் திறந்தவெளியில் உள்ளதால் மழை காலங்களில் குடைகள் பிடித்தும், தார்ப்பாய் மூடியும், இறுதிச்சடங்கு செய்ய வேண்டியுள்ளது.

உடலை தீ மூட்டியதும் மழையில் நனைந்தபடி, மழை விடும் வரை பலமணி நேரம் காத்திருக்கும் அவலம் தொடர்கிறது.

மேலும், கைப்பம்பு போன்ற எந்தவித அடிப்படை வசதிகளும் மயானத்தில் இல்லாமல், முட்புதர் மண்டிக் கிடப்பதால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அதுபோல், கருங்கற்கள் பெயர்ந்து கிடக்கும் சாலையில் உடல்களை சுமந்து வர சிரமம் ஏற்படுகிறது.

இது குறித்து கடந்தகால ஆட்சிகளில் கிராம மக்கள் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, த.வெ.க., ஆட்சியிலாவது தகனமேடை, மயான கொட்டகை மற்றும் மயானப்பாதை அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement