பதுங்கிய 'பாலு'; ஒதுங்கிய 'வேலு': ஆரவாரமிழந்த கோவை திமுக - அதிமுக

7

கோவை: கோவையில் இதுநாள் வரை கோலோச்சிக் கொண்டிருந்த முன்னாள் அமைச்சர்கள் செந்தில்பாலாஜியும், வேலுமணியும் தற்போதைய அரசியல் களத்தில் பார்க்க முடியாத நிலை உருவாகியிருக்கிறது.

கோவை அ.தி.மு.க.,வில் அசைக்க முடியாத சக்தியாக இருந்தவர் முன்னாள் அமைச்சர் வேலுமணி. அவரது கட்டுப்பாட்டுக்குள் கட்சியையும், நிர்வாகிகளையும் வைத்திருந்தார். மேடையில் உள்ள இருக்கைகளில் யார், யாரை அமர வைக்க வேண்டும் என்பதை அவரே தீர்மானிப்பார். அவர் சிக்னல் கொடுத்தால் மட்டுமே கூட்டங் களில் பேசுவதற்கு வாய்ப்பு தரப்படும். அந்தளவுக்கு கட்சியை தன் கைக்குள் வைத்திருந்தார்.

த.வெ.க., அரசுக்கு ஆதரவளிப்பதில், பொது செயலாளர் பழனிசாமிக்கும், அவருக்கும் உருவான பிரச்னை விரிசலை ஏற்படுத்தியது. மாவட்ட செயலாளர் அந்தஸ்தை பறித்து விட்டு, மாநில பொறுப்பு வழங்கியதை வேலுமணி ஏற்கவில்லை. கட்சி அலுவலகமான இதயதெய்வம் மாளிகைக்குள் அமர இடமின்றி தவிப்புக்கு உள்ளாகி இருக்கிறார். தற்போது நம்மூரில் அ.தி.மு.க., என்ன நிலைமையில் இருக்கிறது என்பதை நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.

அவர்கள் கூறுகையில், 'எம்.ஜி.ஆர்., ஜெ., விசு வாசிகள், அ.தி.மு.க., தொண்டர்கள் 'சைலண்ட்'டாக இருக்கின்ற னர். வேலுமணி பின்னால் செல்வதற்கு யாரும் தயாராக இல்லை.

தொண்டாமுத்துாரில் அவரால் வளர்ந்தவர்கள் சிலர் ஆதரவு கொடுக்கலாம். கட்சிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்க வேண்டும்; இளைஞர்களாக இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களை ஈர்க்கக் கூடிய நபர்களாக இருக்க வேண்டும். போராட்டம் நடத்தினால், அவர்களது பேச்சு மக்களை நேரடியாக சென்றடைய வேண்டும்; சிந்திக்க வைக்க வேண்டும். புது ரத்தம் பாய்ச்ச வேண்டும். அதற்கான வேலை அடுத்தடுத்து நடக்கும் என எதிர்பார்க்கிறோம். பதவிக்காக சில நிர்வாகிகள் மட்டுமே மாற்றுக் கட்சிக்கு ஓடுகின்றனர்; தொண்டர்கள் ஓடவில்லை' என்றனர்.

தி.மு.க.,வின் நிலை



இதேபோல், மேற்கு மண்டல தி.மு.க.,வை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.

அ.தி.மு.க., கோட்டையில் ஓட்டையை போட்டு, தி.மு.க.,வை வெற்றி பெற வைத்தவர். சமீபகாலமாக வழக்குகளில் சிக்கி, ஒதுங்கி இருக்கிறார். தற்சமயம் அவர் எங்கிருக்கிறார் என்றே தெரியாத அளவுக்கு சூழல் மாறியிருக்கிறது. கட்சியினரை 'ஆக்டிவ்'வாக வைத்திருக்க, தலைமை அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.

கட்சியின் நிலை என்ன என நிர்வாகிகள் சிலரிடம் கேட்டதற்கு, 'தேர்தல் வெற்றிக்கு கட்சியினரை வழிநடத்திச் செல்ல தலைமையால் நியமிக்கப்பட்டவரே செந்தில்பாலாஜி. அவர் மட்டுமே கட்சியல்ல. வார்டு வாரியாக பொது உறுப்பினர் கூட்டம் நடத்துகிறோம். உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராக தலைமை அறிவுறுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் தி.மு.க., மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு இளைஞரணி, மாணவரணி, தகவல் தொழில்நுட்ப அணியினர் இணைந்து பதிலடி கொடுக்கிறார்கள். செந்தில்பாலாஜி முன்னின்று நடத்த வேண்டிய கூட்டங்கள், அவர் இல்லாமல் நடத்தப்படுகின்றன. அவரது வழிகாட்டுதல் நிர்வாகிகள் மூலம் வந்தடைகின்றன' என்றனர்.

Advertisement