மானியம் வழங்க பண்ணையாளர்கள் கோரிக்கை

ராசிபுரம்:கோழி பண்ணையாளர்கள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், கோழி தீவன பொருட்களுக்கு மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.


நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில், தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் மண்டல தலைவரும், தமிழ்நாடு கோழி பண்ணையாளர்கள் சங்க தலைவருமானசிங்கராஜ் பேசியதாவது:

கோழி தீவனத்திற்கு தேவையான மக்காச்சோளம், சோயாபுண்ணாக்கு, தவிடு போன்ற மூலப்பொருட்களின் விலை ஒரு மாதத்தில், டன்னுக்கு, 10,000 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் முட்டை உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. முட்டை கொள்முதல் விலை, 7 ரூபாயாக இருந்தால்தான் லாபகரமாக கோழி பண்ணையை நடத்த முடியும். பழைய கோழி பண்ணைகளை பராமரித்து வருவதால் செலவினம் அதிகரித்து உள்ளது. ஆள் கூலி, வாடகை ஆகியவையும் உயர்ந்து வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் முட்டை உற்பத்தி, 15 சதவீதம் குறைந்துள்ளது.
நாமக்கல் மண்டலத்தில், 8 லட்சம் முட்டையிடும் கோழிகள் இருக்கும் சூழ்நிலையில், 7 லட்சம் முட்டைகள் தினசரி கிடைத்து வந்தது. வெயிலின் தாக்கம் காரணமாக, தற்போது, ஒரு லட்சம் குறைந்து, 6 லட்சம் முட்டைகள் மட்டுமே உற்பத்தியாகின்றன. கோழிகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. தீவன மூலப்பொருட்களான மக்காச்சோளம், தவிடு கிலோ, 28 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால், மத்திய அரசிடம் கையிருப்பில் இருக்கும் மக்காச்சோளம், அரிசி உள்ளிட்ட பொருட்களை, மானிய விலையில் பண்ணையாளர்களுக்கு வழங்க வேண்டும்.

கோழிகளுக்கு தற்போது கருவாடு போன்ற பொருட்கள் தீவனமாக பயன்படுத்தப்படுவதில்லை. சோயா மற்றும் இயற்கை தானியங்கள் மட்டுமே வழங்கப்படுவதால், நுகர்வோருக்கு கிடைக்கும் முட்டை தரமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும். ஆடி மாதம் என்பதால் முட்டை நுகர்வு குறையாது. தேவை மற்றும் உற்பத்தியை பொறுத்துதான் முட்டை விலை நிர்ணயிக்கப்படுகிறது. முட்டை விலை, 5, 10 காசு உயர்ந்தாலும் சில்லரை விலையில், 25 காசு வரை உயர்த்தி கொள்கின்றனர்.இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக ஒருங்கிணைப்பு குழு மண்டல பொருளாளர் சுந்தரராஜன் வரவேற்றார். தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு துணைத்தலைவர் சண்முகம், மத்திய செயற்குழு உறுப்பினர்கள் வல்சன், தங்கமுத்து, நாகராஜன், பூபதி, சாய்குமார் மற்றும் பல்லடம், ஈரோடு, நாமக்கல், பரமத்தி, மோகனுார், ராசிபுரம் பகுதி நிர்வாகிகள், கோழி பண்ணையாளர்கள் பங்கேற்றனர்.

Advertisement