காற்றாடும் ஓசூர் அரசு வணிக வளாகம்: மக்கள் வரிப்பணம் ரூ.19.50 கோடி வீண்

3


ஓசூர்: ஓசூரில் உள்ள வணிக வளாகத்தை, வியாபாரிகள் வாடகைக்கு எடுக்க முன்வராததால், 19.50 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் வீணாகியுள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, பழைய நகராட்சி அலுவலகத்தை இடித்து, மூலதன மானிய நிதியிலிருந்து, 19.50 கோடி ரூபாய் செலவில் இரு தளங்களுடன் கூடிய வணிக வளாகம் கட்டப்பட்டு, கடந்த மார்ச், 13ம் தேதி திறக்கப்பட்டது.


இங்கு சதுரடிக்கு ஏற்ப குறைந்தபட்சம், 12,534 முதல், 61,335 ரூபாய் வரை வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு விலை கொடுத்து, வணிக வளாகத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியை வாடகைக்கு எடுத்தாலும், போதிய வருவாய் கிடைக்காது என, வியாபாரிகளின் கருதினர். இதுதவிர, வாடகைக்கு எடுப்பவர்கள், 5 முதல், 10 லட்சம் ரூபாய் வரை முன்பணம் செலுத்த வேண்டியுள்ளது.


அதுமட்டுமின்றி, பத்தலப்பள்ளி பகுதிக்கு புறநகர் பஸ் ஸ்டாண்ட் மாற்றப்பட உள்ளது. இன்னும் சில மாதங்களில் புதிய பஸ் ஸ்டாண்ட் திறக்கப்பட்டு விடும். அதன் பின், ஓசூர் நகருக்குள் உள்ள தற்போதைய பஸ் ஸ்டாண்ட், டவுன் பஸ் ஸ்டாண்டாக மாறி விடும்.


இந்நிலையில், கூடுதல் விலை கொடுத்து வணிக வளாகத்தை எடுத்தாலும், போதிய வருவாய் வர வாய்ப்பில்லை என்பதால், வணிக வளாகத்தை வாடகைக்கு எடுக்க வியாபாரிகள் தயங்குகின்றனர். ஐந்து மாதங்களாக வணிக வளாகம் வாடகைக்கு கேட்கப்படாமல் உள்ளது. இதனால் மாநகராட்சியின் மூலதன மானிய நிதியான, 19.50 கோடி ரூபாய் முடங்கியுள்ளது.


புதிய வணிக வளாகத்தில் பார்க்கிங் வசதி உள்ளது. அதனால், அதன் ஒரு தளத்தை தியேட்டர் செயல்படுவது போல் மாற்றி விட்டால், அங்கு வருபவர்களை குறி வைத்து, வணிக வளாகத்தில் கடைகளை துவங்க பலர் முன்வருவர். மாநகராட்சிக்கும் வருவாய் கிடைக்கும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Advertisement