பிள்ளையார்பாளையத்தில் வங்கி கிளை இல்லாமல் அவதி கடன் உள்ளிட்ட சேவைகள் பெற அலைச்சல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட, 50,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் பிள்ளையார்பாளையம் பகுதியில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளை இல்லாததால், கடன் உள்ளிட்ட சேவை பெற காஞ்சிபுரம் நகருக்கு அலைய வேண்டிய நிலை உள்ளதாக, பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

காஞ்சிபுரம் நகரின் முக்கிய குடியிருப்பு பகுதியாக, பிள்ளையார்பாளையம் விளங்குகிறது. பட்டு நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இங்கு வசிக்கின்றன.

அதிருப்தி

மேலும், மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன.

இவ்வளவு வசதிகள் இருந்தும், தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கி கிளை கூட இல்லாதது, அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பணம் எடுப்பது, செலுத்துவது, ஓய்வூதியம் பெறுவது, நகைக்கடன், விவசாயம் மற்றும் சுயதொழில் கடன் பெறுவது, வங்கி கணக்கு தொடர்பான சேவைகள் உள்ளிட்ட அனைத்திற்கும், காந்தி சாலை, சாலை தெரு, அன்னை இந்திரா சாலை உள்ளிட்ட நகர மைய பகுதிகளில் உள்ள வங்கிகளை, நாட வேண்டிய நிலை உள்ளது.

குறிப்பாக, போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளுக்கு சென்று வருவதால், முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஓய்வூதியதாரர்கள், பெண்கள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்கள், அதிக சிரமம் அடைந்து வருகின்றனர்.

பிள்ளையார்பாளையம் பகுதியில் தனியார் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் சார்பில், எட்டு ஏ.டி.எம்., மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

கோரிக்கை

பணம் எடுக்கும் வசதி இருந்தாலும், மற்ற வங்கி சேவைகளை பெற கிளை இல்லாததால், பொதுமக்கள் தேவையில்லாத அலைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.

மக்கள் தொகையும், வங்கி சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ள நிலையில், பிள்ளையார்பாளையத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளையை உடனே தொடங்க, வங்கி நிர்வாகமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Advertisement