எம்.சாண்ட் கடத்திய வாகனங்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், எம்.சாண்ட் கடத்தியது தொடர்பாக, இரு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கிருஷ்ணகிரி அடுத்த கே.ஆர்.பி., அணை கூட்ரோடு பகுதியில், நேற்று முன்தினம் சுண்டேகுப்பம் வி.ஏ.ஓ., பூபதி மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் ரோந்து சென்றனர்.

அப்போது, அவ்வழியாக வந்த டிராக்டரை சோதனையிட்டதில், ஒரு யூனிட் எம்.சாண்ட், காவேரிப்பட்டணம் வழியாக கடத்தி செல்ல முயன்றது தெரிந்தது. பூபதி புகார்படி, காவேரிப்பட்டணம் போலீசார், டிராக்டரை பறிமுதல் செய்து, அதன் உரிமையாளரான சுண்டேகுப்பம் அண்ணாதுரை, 28, என்பவரை கைது செய்தனர்.

அதேபோல, பர்கூர் அடுத்த ஜிட்டாண்டப்பள்ளி அருகே சென்ற லாரியை வருவாய் துறையினர் சோதனையிட்டனர். அதில், 2 யூனிட் எம்.சாண்ட் கடத்தி செல்ல முயன்றது தெரிந்தது. ஜெகதேவிபாளையம் வி.ஏ.ஓ., தீபா அளித்த புகார்படி, பர்கூர் போலீசார், எம்.சாண்டுடன் லாரியை பறிமுதல் செய்து, லாரி உரிமையாளரான பர்கூர் திருப்பதி, 40, என்பவர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement