பிரிட்டன் தொழிலாளர் கட்சித் தலைவரானார் ஆன்டி பர்னம்: விரைவில் பிரதமராக பதவியேற்பு

4


லண்டன்: பிரிட்டனின் தொழிலாளர் கட்சி தலைவராக ஆன்டி பர்னம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விரைவில் அவர் பிரதமர் ஆக பதவியேற்க உள்ளார்.


ஐரோப்பிய நாடான பிரிட்டனில், கடந்த 2024, ஜூலையில் நடந்த பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. பிரதமராக கீர் ஸ்டார்மர் பொறுப்பேற்றார். நாட்டின் பொருளாதார மந்தநிலை, கடும் விலைவாசி உயர்வு, அரசியல் ரீதியிலான சில தவறான முடிவுகள் காரணமாக ஸ்டார்மர் அரசின் மீது அந்நாட்டு மக்கள் அதிருப்தியில் இருந்தனர். இதன் காரணமாக, கடந்த மாதம் இங்கு நடந்த உள்ளாட்சி தேர்தலில், தொழிலாளர் கட்சி பெரும் தோல்வியை சந்தித்தது.


இது, தொழிலாளர் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. பிரதமராக இருந்த கீர் ஸ்டார்மருக்கு நெருக்கடிகள் அதிகரித்தன. சொந்த கட்சிக்குள்ளேயே அவருக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனையடுத்து பதவியேற்ற இரண்டு ஆண்டுகளில் பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார். மேலும் கட்சித் தலைவர் பதவியில் இருந்தும் விலகினார்.


இதனையடுத்து அடுத்த பிரதமர் மற்றும் தொழிலாளர் கட்சியின் தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.


மேக்கர்பீல்டு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற மான்செஸ்டர் நகர மேயர் ஆன்டி பர்னம் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதாக அறிவித்தார். அவருக்கு கட்சியில் ஆதரவும் அதிகரித்தது.


இந்நிலையில் தொழிலாளர் கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், 379 பேரின் ஆதரவு பெற்று ஆன்டி பர்மன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் விரைவில் பிரிட்டன் பிரதமர் ஆக பதவியேற்க உள்ளார்.


இதனைத் தொடர்ந்து, பேசிய அவர், நாட்டிலும், , கட்சியிலும் மாற்றம் கொண்டு வரும் வகையில் ஐந்து அம்ச திட்டங்களை வெளியிட்டார். ஆன்டி பர்னம் விரைவில் மன்னர் சார்லசை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார்.

Advertisement