கடலுாரி்ல் கப்பல் போக்குவரத்து துவங்க நடவடிக்கை: அமைச்சர் ஆனந்த் தகவல் 

 கடலுார்: ‘கடலுாரில் அடுத்தாண்டு ஜூலைக்குள் கப்பல் போக்குவரத்து துவங்கப்படும்’ என, அமைச்சர் ஆனந்த் பேசினார். கடலுார் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில், 3 நாட்கள் நடைபெறும் கோடை விழா, சில்வர் பீச்சில் நேற்று துவங்கியது.

இந்த விழாவில், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். அமைச்சர் ஆனந்த், கோடை விழாவை துவக்கி வைத்து பேசுகையில், ‘வரும் 2027ம் ஆண்டு  ஜூலை மாதத்திற்குள் கடலுாரில் கப்பல் போக்குவரத்து துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்.  கடலுாரில் புதிய பஸ் நிலையம் அமைப்பது தொடர்பாக முதல்வர் விஜய் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். தமிழக முதல்வர் விஜயின் அனுமதி பெற்றுதான் எந்த திட்டங்களாக இருந்தாலும் செயல்படுத்த முடியும். மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து தேவை அறிந்து உடனுக்குடன் செய்யக் கூடியவர் தான் முதல்வர் விஜய். அதனால், கடலுார் மாவட்டத்திற்கு கண்டிப்பாக அனைத்து திட்டங்களும் விரைவில் கொண்டு வரப்படும். வாரந்தோறும், இங்கு, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் உள்ளூர் கலைஞர்கள் மூலமாக கலை நிகழ்ச்சிகளை நடத்த கலெக்டர் ஏற்பாடு செய்ய வேண்டும். இதன் மூலமாக உள்ளூர் கலைஞர்களை  ஊக்கப்படுத்துவதாக அமையும். மக்களும் அமைதியாக, சுதந்திரமாக கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசிப்பார்கள். இது சம்பந்தமாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமாரிடம் பேசி வருகிறேன்.இனி வரும் காலங்களில் கடலுார் மாவட்டத்தை பொருத்தவரையில் இங்கு, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்’ என்றார். அமைச்சர் ராஜ்குமார் பேசுகையில், ‘ சில்வர் பீச் ஒரு சிறந்த சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது. இக்கடற்கரை சென்னை மெரினா கடற்கரைக்கு அடுத்து மிக நீண்ட கடற்கரையாக உள்ளதால் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடமாக உள்ளது’ என்றார். விழாவில், துணை மேயர் தாமரைசெல்வன், டி.ஆர்.ஓ., புண்ணியகோட்டி, எஸ்.பி., விவேகானந்த சுக்லா, ஆர்.டி.ஓ., சுந்தரராஜன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாலகணேஷ், மாநகராட்சி கமிஷனர் கிஷன்குமார், சுற்றுலாத்துறை அலுவலர் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கலை நிகழ்ச்சிகள் நடந்தது. கோடை விழா நாளை 20ம் தேதி வரை நடக்கிறது. 

Advertisement