போலி மருந்து வழக்கு: சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்

புதுச்சேரி: புதுச்சேரியில் மீண்டும் புயலை கிளப்பியுள்ள போலி மருந்து வழக்கை, சி.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரணைக்கு மாற்றி, டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி அடுத்த குருமாம்பேட்டில் இயங்கி வந்த 'மெடினோக் ஹெல்த் கேர்'என்ற நிறுவனத்தில், போலி மருந்து மாத்திரைகள் தயாரிக்கப்படுவதை, கடந்த 13ம் தேதி இரவு, மேட்டுப்பாளையம் போலீசார் மற்றும் மருந்து தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். நிறுவன உரிமையாளரான புதுச்சேரி சண்முகாபுரம் பிரபாகரன், 52; என்பவரை கைது செய்தனர்.

தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம், வானுார் தாலுகா பூத்துறையில் பிரபாகரன் நடத்தி வந்த குடோனை தமிழக மருந்து தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் கடந்த 14ம் தேதி முதல் மூன்று நாள் சோதனை நடத்தியதில், 625க்கும் மருந்துகள் தயாரித்திருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன.

பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த போலி மருந்து வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம் செய்து டி.ஜி.பி., ஷாலினி சிங் உத்தரவிட்டுள்ளார். இதனால், இன்னும் ஓரிரு நாளில் இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணையை துவங்க உள்ளனர்.

பூத்துறையில் 'சீல்' வைக்கப்பட்ட குடோனை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அனுமதி கோரி நேற்று முன்தினம் விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட், குடோனை மருந்து தரக்கட்டுப்பாட்டு துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர அனுமதி வழங்கினார். அதனைத் தொடர்ந்து, குடோன் வளாகத்தை சி.சி.டி.வி., மூலம் கண்காணிக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மே லும், அடுத்த கட்டமாக குடோனை நிர்வகித்து வந்த சிவா பிரவீனுக்கு சம்மன் அனுப்பி அவரிடம் விசாரணை நடத்தி, அறிக்கையை துறை இயக்குநருக்கு சமர்பித்து, வழக்கு தொடர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Advertisement