பயிர்க்காப்பீடு செய்து கொள்ள விவசாயிகளுக்கு அழைப்பு

உடுமலை: விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்கள், சீதோஷ்ண நிலை மாற்றம், இயற்கை இடர்ப்பாடுகளினால், ஏற்படும் மகசூல் இழப்பிற்கு, ஈடு செய்யும் வகையில், பிரதம மந்திரியின் பயிர்க்காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் நடப்பாண்டு, காரீப் பருவத்தில் நிலக்கடலை, மக்காச்சோளம், சோளம், வாழை, மரவள்ளி, வெங்காயம், மஞ்சள், தக்காளி மற்றும் சிறப்பு பருவத்தில் நெற்பயிருக்கு காப்பீடு செய்ய விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.

பயிர்க்கடன் பெறும் விவசாயிகள், தாங்கள் கடன் பெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் வாயிலாக பயிர்க்காப்பீடு பதிவு செய்யலாம்.

கடன் பெறாத விவசாயிகள், நடப்பு பசலி ஆண்டுக்கான, அடங்கல் சான்றை, கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்று, அதனுடன் சிட்டா, வங்கிக்கணக்கு பாஸ் புத்தகம் நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன், பொது இ- சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பதிவு செய்யலாம்.

காப்பீடு கட்டணமாக, ஏக்கருக்கு, நிலக்கடலைக்கு ரூ.678, நெற்பயிருக்கு ரூ.590, மக்காச்சோளத்திற்கு ரூ.740, சோளத்திற்கு ரூ.125, வாழைக்கு ரூ.5,045, மரவள்ளிக்கு ரூ.1,801, வெங்காயத்திற்கு ரூ.2,290, மஞ்சளுக்கு ரூ.4,750, தக்காளிக்கு ரூ.1,600 பிரிமியம் தொகையாக செலுத்த வேண்டும்.

பயிர்க்காப்பீட்டிற்குரிய பிரிமியம் தொகை, நிலக்கடலை, சோளம், வெங்காயம், தக்காளி ஆகிய பயிர்களுக்கு, வரும் ஆக., 31க்குள் பயிர்க்காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.

அதே போல், மக்காச்சோளம் பயிருக்கு, செப்.,16ம் தேதிக்குள்ளும், மஞ்சள் மற்றும் வாழை பயிருக்கு, செப்.,15க்குள்ளும், நெற் பயிருக்கு, நவ.,15ம் தேதிக்குள் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விபரங்கள் பெற, வட்டார வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement