'உழைக்க துடிக்கும் பெண்களுக்கான உத்வேக மேடை!
காரைக்குடி நகரத்தார் மகளிர் சங்கத் தலைவரும், 'நகரத்தார் திருமகள்' இதழ் ஆசிரியருமான ரோஜா வள்ளிக்கண்ணு நாகராஜன்:
எங்கள் சங்கம் ஆரம்பித்து, ஒன்பது மாதங்கள் தான் ஆகின்றன; 200க்கும் மேலான உறுப்பினர்கள் இருக்கின்றனர்.
இளம்பெண்கள் முதல், மூதாட்டிகள் வரை, வயது வித்தியாசம் இல்லாமல், அனைவரும் கைகோர்த்திருக்கிறோம்.
எல்லா விஷயங்களுக்கும் ஆண்களை சாராமல், பெண்கள் சுதந்திரமாகவும், தன்னம்பிக்கையுடனும் வாழ வேண்டும் என்பது தான், எங்கள் சங்கத்தின் நோக்கம்.
அதற்காக, கார் ஓட்டும் பயிற்சி, சிறுதொழில் பயிற்சிகள், யோகா, தியானம் என எல்லாம் கற்றுக் கொடுக்கிறோம்.
இந்த சங்கத்தில் உள்ள பலரின் பிள்ளைகள், வெளிநாடுகளில் வசிக்கின்றனர். தனியாக வசிக்கும் வயதான பெண்கள், ஒருவருக்கொருவர் ஆதரவாக, உதவியாக இருக்கின்றனர்.
இப்படி, சங்க நிகழ்ச்சிகளில் தங்களின் பெற்றோர் ஆர்வத்துடன் பங்கேற்பதால், வெளிநாடுகளில் வசிக்கும் பிள்ளைகளும் நிம்மதியாக இருக்கின்றனர்.
யாருக்கு என்ன உதவி தேவை என்றாலும், ஓடிச் சென்று நிற்கும் மனதும், ஒற்றுமையும் தான் எங்களின் பெரிய பலம். இங்கே தலைவர், செயலர், பொருளாளர் பதவிகள் எல்லாம் நிர்வாகத்துக்காக மட்டுமே; மற்றபடி சங்கத்தில் அனைவருமே சரிசமம் தான்.
எங்கள் சங்கம் சார்பில், 'செட்டிநாட்டு சந்தை' என்ற பெயரில், வெளியூர்களுக்கு செட்டிநாட்டு பொருட்களை கொண்டு சென்று விற்பனை செய்கிறோம்.
நம் சொந்த மண்ணிலேயே, நம் பொருட்களுக்கு அந்த அளவுக்கு தேவை இருக்குமா என்று ஆரம்பத்தில் பலரும் சந்தேகப்பட்டனர். ஆனால், செட்டிநாட்டு பொருட்களுக்கு, எல்லா இடங்களிலும் தனி மவுசு உண்டு என்ற எங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை, வெற்றியை தந்துள்ளது.
இது, வெறும் பொழுதுபோக்கு சந்தையாக இல்லாமல், பெண் தொழில் முனைவோருக்கு பொருளாதார ரீதியாக பயன்பட வேண்டும் என, மூன்று மாதங்களுக்கு முன்னரே திட்டமிட்டோம். விளம்பர வெளிச்சம் இல்லாத பெண் தொழில் முனைவோரை தேடிப் பிடித்து, கடைகள் ஒதுக்கினோம்.
நிதி மேலாண்மை, அறுசுவை உணவு, அரங்க வடிவமைப்பு, உபசரிப்பு, பாதுகாப்பு, விளம்பரங்கள் என, அனைத்து வேலைகளையும் தனித்தனி மகளிர் குழுக்கள் வாயிலாக பிரித்து செய்தோம்.
எங்கள் குழுவில் உள்ள பெண்கள் அத்தனை பேரும், இதை சொந்த வீட்டு விசேஷம் போல் நடத்தினர்.
இந்த சந்தையில் கிடைத்த முதல் அனுபவத்தை வைத்து, எதிர்காலத்தில் இன்னும் பிரமாண்டமாக எங்களால் செய்ய முடியும். உன்னதமான இந்த முயற்சி, வெறும் வணிகச் சந்தை மட்டுமல்ல, உழைக்கத் துடிக்கும் ஒட்டுமொத்த பெண்களுக்கான ஒரு உத்வேக மேடையும் கூட!
மேலும்
-
கரப்பான்பூச்சி ஜனதா இயக்கம் போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள்; ஆர்எஸ்எஸ் குற்றச்சாட்டு
-
விருத்தாசலம் தனி மாவட்டம் பிரேமலதா எம்.எல்.ஏ., மனு
-
அரசு பள்ளியில் நுாலகம் எரிந்து சாம்பல்: திட்டக்குடியில் பரபரப்பு
-
வேளாங்கண்ணியை தொடர்ந்து தாம்பரம் ரயிலிலும் ஸ்ரீவி.,யில் ஸ்டாப்பிங் இல்லை பயணிகள் வேதனை
-
கடையை உடைத்து பொருள் திருட்டு
-
வாகன ஓட்டிகள் சிரமம்